"சிங்கம்" பட வில்லனாக வலம் வந்து தொழிலதிபர்களை மிரட்டியவர்... யார் இந்த சீசிங் ராஜா?

Rowdy Seizing Raja : தமிழகம், ஆந்திரா என இரண்டு மாநில காவல்துறையால் தேடப்பட்டவர் தான் ரவுடி சீசிங் ராஜா. யார் இவர்? ஏன் சீசிங் ராஜா என அழைக்கப்படுகிறார்? என்பது குறித்து பார்க்கலாம்.

Sep 23, 2024 - 11:14
Sep 23, 2024 - 15:52
 0
"சிங்கம்" பட வில்லனாக வலம் வந்து தொழிலதிபர்களை மிரட்டியவர்... யார் இந்த சீசிங் ராஜா?
யார் இந்த சீசிங் ராஜா?

Rowdy Seizing Raja : ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள் நரசிம்மன்- அங்கம்மா தம்பதி. இவர்களின் மகன் ராஜா. சென்னை கிழக்கு தாம்பரத்தில் ராஜா வசித்து வந்தார்.  சென்னையில்  9-ம் வகுப்பு வரை படித்த ராஜா, வாகனங்களை  சீசிங் செய்யும் வேலைகளைச் செய்து வந்தார். அப்போது தாம்பரம் மார்க்கெட் பகுதியில் கோலோச்சிய பிரபலமான  ரவுடி மார்க்கெட் சிவாவுடன் சேர்ந்து சீசிங் ராஜா மாமூல் வசூலிப்பது, ரியல் எஸ்டேட் கட்டப்பஞ்சாயத்து என  ரவுடி சாம்ராஜ்ஜியத்துக்குள் காலடி எடுத்து வைத்தார். பிறகு ரவுடி ஆற்காடு சுரேஷின் நட்பு கிடைத்தது. 

2007-ம் ஆண்டு பணம் கேட்டு மிரட்டியதாக ராஜா, ஆற்காடு சுரேஷ்  ஆகியோர் மீது கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவானது.  2008-ம் ஆண்டு  ராஜா மீது கொலை வழக்கு கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் பதிவானது. 2009-ல் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் மற்றொரு கொலை வழக்குப்பதிவானது.  இப்படி ராஜா மீது அடுத்தடுத்து கொலை வழக்குகள் பதிவானதும் சிட்லபாக்கம் காவல் நிலைய ரவுடிகள் பட்டியலில் ஏ பிளஸ் கேட்டகிரியில் ராஜாவின் பெயரும் சேர்க்கப்பட்டது. வாகன சீசிங் வேலைப்பார்த்தால் போலீஸ் ரெக்கார்டில் ராஜாவின் பெயர் சீசிங் ராஜா என அடைமொழியுடன் எழுதப்பட்டது. 

இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் என 39 க்கும் மேற்பட்ட வழக்குகள். 6 கொலைவழக்குகள். 7 தடவை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழும் சிறைக்கு சென்றவர் தான் சீசிங் ராஜா. தமிழகம் ஆந்திர மாநில காவல்துறை ரெக்கார்டில் தேடப்படும் முக்கிய ரவுடி தான் சீசிங் ராஜா. தற்போது என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார். 

ரவுடியாக வலம் வந்த போது சீசிங் ராஜா பணம் தராத தொழிலதிபர்களை துப்பாக்கி முனையில் காரில் கடத்தி அவர்களை சித்ரவதை செய்து பணம் கேட்டு மிரட்டுவதில் கைதேர்ந்தவர் என்று சொல்கின்றனர் தனிப்படை போலீசார்.  கடந்த 2009-ம் ஆண்டு சேலையூர் காவல் நிலையத்தில் சீசிங் ராஜா மீது முதல் கடத்தல் வழக்கு பதியப்பட்டது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த கடத்தல்  சம்பவங்களில்  சீசிங் ராஜாவும் அவரது கூட்டாளிகளும் ஈடுபட்டதால் புகார் கொடுக்கவே பயப்படுவார்கள் என்று தனிப்படை போலீசார் கூறுகின்றனர்.

கடந்த 2021-ம் ஆண்டு குரோம்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் சரவணன் என்பவரை கடத்திய வழக்கில் சீசிங் ராஜா  துப்பாக்கியோடு கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் மட்டுமல்லாமல் சீசிங் ராஜா மீது ஆந்திராவிலும் கடத்தல் வழக்குகள், கொலை வழக்குகள் உள்ளன. 2016-ம் ஆண்டு ஆந்திராவில் பில்டிங் காண்டிராக்டர் ரமேஷ் என்பவரை மிரட்டி லட்சக்கணக்கில் சீசிங் ராஜா பணம் பறித்ததாக வழக்கு உள்ளது. சீசிங் ராஜா நவீன ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்துவார் என்பதால் கடத்தபடுபவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் உயிர்பயத்தில் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிடுவார்கள் என்கின்றனர் போலீசார்.

சென்னை புறநகர், செங்கல்பட்டு உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள நிலங்களை எந்த தொழிலதிபர் வாங்க உள்ளார் என்பது உடனே சீசிங் ராஜாவிற்கு தகவல் வந்துவிடும். அந்த இடத்தின் ப்ளு பிரிண்ட் சீசிங் ராஜாவின் கைக்கு வந்துவிடும். அந்தளவுக்கு அவர் தனது ரவுடி நெட்வொர்க்கை வைத்திருந்ததில் தாதாவாக வலம் வந்தாராம். இவர் எப்போதும் வாட்ஸ்அப் காலில் பேசிதான் மிரட்டுவார் என்றும் கூறப்படுகிறது.  2022-ம் ஆண்டில் சென்னை வேளச்சேரியில் வசித்த  முதியவர் ஒருவருக்கும், மலேசியாவை சேர்ந்தவருக்கும் இடையே  இடம் தொடர்பாக பிரச்சனை இருந்ததது. அதில் சீசிங் ராஜாவிடம்  மலேசியாவைச் சேர்ந்தவர் சென்றார்.  உடனே சீசிங் ராஜா, தன்னுடைய கூட்டாளிகளை வேளச்சேரியில் உள்ள முதியவர் வீட்டுக்கு அனுப்பி தூப்பாக்கி முனையில் மிரட்டியதாக கூறப்படுகிறது.  வேளச்சேரி காவல் நிலையத்தில் சீசிங் ராஜா மீது புகாரளித்த பிறகு அப்போது கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2010-ம் ஆண்டு வடசென்னை பிரபல ரவுடி சின்னா, வழக்கறிஞர் பகத்சிங் பூந்தமல்லி நீதிமன்றம் அருகே வைத்து சீசிங் ராஜா தனது  கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்டனர். 2015-ம் ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் தென்னரசுவை திருவள்ளுர் வெங்கல்  பகுதியில் ஆற்காடு சுரேஷிக்காக சீசிங் ராஜா தனது கூட்டாளிகள் மூலம் நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்தார். 2018-ம் ஆண்டில் ஆந்திராவில் கோபிநாத், அசோக்குமார் என இரண்டு பேரை சீசிங்ராஜா அவரின் கூட்டாளிகள் கொலை செய்தனர்.

கூலிப்படையை வைத்து கொலை செய்வதில்  சீசிங் ராஜா  கைதேர்ந்தவர்.  இவர் ஒருவருக்கு ஸ்கெட்ச் போடுவதற்கு முன்பே அவரின் முழுவிவரங்களைச் சேகரித்த பிறகுதான் பக்காவாக சம்பவத்தில் ஈடுபடுவார் என்று போலீசார் கூறுகின்றனர். தமிழகத்தில் சம்பவத்தை செய்துவிட்டு ஆந்திராவில் பதுங்கிக் கொள்வதுதான் சீசிங் ராஜாவின் ஸ்டைல்.  

மேலும் படிக்க: அதிமுகவில் நீக்கப்பட்டவர்களுக்கு இடமேயில்லை.. உறுதியாக சொன்ன எடப்பாடி பழனிச்சாமி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கூட சீசிங் ராஜாவை போலீசார் தேடினர். விலை உயர்ந்த சொகுசு கார்கள், ஆந்திராவில் பண்ணை வீடு என ஆடம்பரமாக சீசிங் ராஜா வாழ்ந்து வந்தார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். ஒரு மனைவி சென்னையிலும் இன்னொரு மனைவி ஆந்திராவிலும் உள்ளனர்.  2 மாநிலத்தை கலக்கி வந்த ரவுடி சீசிங் ராஜா தற்போது என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம் பாகம் 1ல் வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜ் கேரக்டர் ரவுடி சீசிங் ராஜாவுடையது என பரவலாக அப்போது போலீசார் மத்தியில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow