சீமான் விவகாரம்.. அசைவ கேள்விகள் என் உடம்பிற்கு ஆகாது என கூறி நழுவிய வைரமுத்து
பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த சீமான் பற்றிய கேள்விக்கு "இன்று நான் சைவம் அசைவ கேள்விகள் என் உடம்பிற்கு ஆகாது" என்று கவிஞர் வைரமுத்து பதிலளித்தார்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாளை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இன்று (ஜன 15) மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினத்தையொட்டி பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. பொங்கல் திருநாளையொட்டி வரும் 17-ஆம் தேதியும் விடுமுறை தினமாக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், திருவள்ளுவர் திருநாளையொட்டி சென்னை அடையாறு பெசன்ட் நகரிலுள்ள திருவள்ளுவர் சிலைக்குத் கவிஞர் வைரமுத்து தலைமையில் தமிழ் அறிஞர்களும், கல்வியாளர்களும் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து திருக்குறள் பாடல் பாடப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் கவிஞர் வைரமுத்து பேசியதாவது, இந்த ஆண்டு திருவள்ளுவருக்கு பொன் ஆண்டு ஆகும். ஏனென்றால் கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு இது வெள்ளி விழா ஆண்டாகும். அந்த வெள்ளி விழாவை உலகமெல்லாம் கொண்டாடும் வகையில் சிறப்பித்த முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு நன்றி என்று கூறினார்.
மேலும், திருக்குறள் உலகப் பொதுமறை என்பதால் எந்த ஒரு தனி மதமும் அதனை கொண்டாட முடியாது. திருக்குறள் எல்லா மதத்துக்கும், எல்லா இனத்தவருக்கும் சொந்தமானது. எனவே பிரதமர் நரேந்திர மோடி, திருக்குறளை உலகப் பொதுமறையாக ஏற்றுக் கொண்டு அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து, கடந்த 31-ஆம் தேதி திருக்குறளுக்கு உரை எழுத போவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தேன். அதனை கடந்த இரண்டாம் தேதி முதல் தொடங்கி உள்ளேன். அனைத்து திருக்குறளையும் இளைஞர்களிடம் சேர்க்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அறத்துப்பாலும், பொருட்பாலும் அறிவு பொருளாக விளங்கும் எனவும் காமத்துப்பால் கவிதை பொருளாக விளங்கும் எனவும் தெரிவித்தார்.
அறிவுக்கும் கவிதைக்கும் பாலம் இடுகிற தமிழர்களின் ஞானப் பேர் அடையாளமாக தெரிகிற திருக்குறளுக்கு உரை எழுதி எல்லா தமிழர்களுக்கும் அதனை சேர்க்க வேண்டும் என்பது தன்னுடைய விருப்பம் என கூறினார். பெரியார் குறித்து அவதூறு கருத்து கூறும் சீமான் பற்றிய கேள்விக்கு "இன்று நான் சைவம் அசைவ கேள்விகள் என் உடம்பிற்கு ஆகாது" என்று பதிலளித்தார்.
What's Your Reaction?