இறுதிக்கட்டத்தை எட்டிய அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய விவகாரம்!
அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியதாக கைது செய்யப்பட்டவரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் பெஞ்சல் புயல் மழையினால் மலட்டாறு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், மலட்டாறு கரையோரமாக உள்ள திருவெண்ணைநல்லூர், அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளானது.
இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்க வனத்துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்டத்தின் அப்போதைய கலெக்டர் பழனி, முன்னாள் எம்.பி. பொன்.கவுதம சிகாமணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சென்றனர்.
இருவேல்பட்டு கிராமத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்க சென்ற போது அமைச்சர் மற்றும் அதிகாரிகளை ஆபாசமாக திட்டி சேற்றை வாரி வீசி மிரட்டல் விடுத்ததாகவும், பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் தனி பாதுகாப்பு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் செய்தார்.
ஜாமீன் வழங்க அரசுத்தரப்பு எதிர்ப்பு:
இந்த புகாரின் பேரில் சேற்றை அள்ளி வீசிய இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி சுந்தர் மோகன் முன் விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில், அமைச்சர் மீது அரசியல் உள் நோக்கத்துடன் சேறு வீசப்பட்டதால் ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், எந்த அரசியல் உள் நோக்கமும் இல்லை என்றும் புயல் பாதிப்பிற்கு நிவாரணம் எதுவும் உடனடியாக வழங்காததால்,விரக்தியில் அது போன்று நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
Read more: கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்வு- வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
What's Your Reaction?






