உதயநிதி கிள்ளுக்கீரை அல்ல... சீமான் பாஜகவின் கைக்கூலி... நாஞ்சில் சம்பத் விமர்சனம்!

உதயநிதியை விமர்சனம் செய்யும் சீமான் பாஜகவின் கைக்கூலி என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

Sep 22, 2024 - 17:55
 0
உதயநிதி கிள்ளுக்கீரை அல்ல... சீமான் பாஜகவின் கைக்கூலி... நாஞ்சில் சம்பத் விமர்சனம்!
சீமான் பாஜகவின் கைக்கூலி... நாஞ்சில் சம்பத் விமர்சனம்

நடிப்பு, தயாரிப்பு, படங்கள் விநியோகம் என சினிமாவில் தீவிரமாக ஈடுபட்டு வந்த உதயநிதி ஸ்டாலின், 2018ம் ஆண்டுக்கு பிறகு அரசியலில் படு பிசியாக செயல்பட்டு வருகிறார். 2019 மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொண்ட நிலையில், திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த ஆண்டே திமுகவின் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பு உதயநிதியைத் தேடி வந்தது. இதையடுத்து 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கூடுதலாக சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையும் வழங்கப்பட்டது. இந்நிலையில் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுக அமைச்சர்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கடுமையான விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் துணை முதல்வர் ஆக வேறு ஆட்களே இல்லையா? கருணாநிதி வீட்டிற்கு மட்டுமே துணை முதல்வர் பதவியா? என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருந்தார். 

இதற்கு பதிலளித்துள்ள நாஞ்சில் சம்பத், உதயநிதியை விமர்சனம் செய்யும் சீமான் பாஜகவின் கைக்கூலி எனத் தெரிவித்துள்ளார். புதுச்சேரி லாஸ்பேட்டை நூரே ஹிதாயத்துல் இஸ்லாமியா மஸ்ஜித் சார்பில் சமய நல்லிணக்க விழா லாஸ்பேட்டை பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமாகாது இதனால் இந்தியா பிளவுபடும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறார்கள் அப்படியானால் ஹரியானாவில் தேர்தல் நடக்கிறது மகாராஷ்டிராவில் ஏன் நடத்தவில்லை? ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை, இது முட்டாள்தனமான முடிவு. ராகுல் காந்தியை அச்சுறுத்தியோ உயிர் பயத்தை காட்டியோ அவரை மிரட்ட முடியாது. தற்போது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார் நாளை அவரே பிரதமராக வருவார் என்பதனை பாஜகவினர் புரிந்து கொள்ள வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், “விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்படும் மது ஒழிப்பு மாநாடு மகக்தான வெற்றி பெறும். சுமார் 2 லட்சம் பெண்களை இம்மாநாட்டில் திருமாவளவன் திரட்டுகிறார். மாநில சுயாட்சி டெல்லியில் எதிரொலிப்பது போல மது விலக்கு தேசிய அளவில் எழுச்சியாக அமையும். சீமான் பாஜகவின் கைக்கூலி. உதயநிதி ஒன்றும் கிள்ளுக்கீரை அல்ல, நீட்டுக்கு எதிரான தலைவர் அவர். அதனால் விரைந்து வேகமாக ஸ்டாலின் சுமையை பகிர்ந்து கொள்வார். விரைவில் உதயநிதி துணை முதல்வராக பதிவு ஏற்பார்” எனக் கூறியுள்ளார். 

மேலும் படிக்க: அரசு பணியாளர் தேர்வு மதிப்பீட்டில் மாற்றம்... மென்பொருள் மூலம் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய முடிவு!

இதையடுத்து விஜய் மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்த நாஞ்சில் சம்பத், திருப்பதி லட்டு விவகாரம் குறித்து தான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow