தமிழ்நாடு

சாக்கு மூட்டையில் மிதந்த அண்ணன்... சொத்து தகராறில் கொடூரம் துண்டு துண்டாக வெட்டி கொலை!

பெரியப்பா மகனை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த தம்பி, சடலத்தை சாக்கு முட்டையில் கட்டி குளத்தில் வீசிய கொடூரம் நெஞ்சை பதற வைத்துள்ளது.

சாக்கு மூட்டையில் மிதந்த அண்ணன்... சொத்து தகராறில் கொடூரம் துண்டு துண்டாக வெட்டி கொலை!
சாக்கு மூட்டையில் மிதந்த அண்ணன்... சொத்து தகராறில் கொடூரம் துண்டு துண்டாக வெட்டி கொலை!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த கருவலூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் கோவிந்தசாமியின் மகன், அவிநாசி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கோவிந்தசாமியின் சித்தப்பா மகன் ரமேஷ், அவரிடம் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் சந்தேகத்தின் பேரில் ரமேஷை அழைத்து விசாரித்துள்ளனர் போலீஸார். ஆனால் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேச, போலீஸார் தங்களது ஸ்டைலில் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். 

இறுதியில் வாயை திறந்த ரமேஷ், நடந்தது என்ன என்று ஒன்றுவிடாமல் அப்படியே கூறியுள்ளார். அதாவது, ரமேஷுக்கும் அவரது சகோதரிக்கும் இடையே சொத்து தகராறு இருந்ததாகவும், இதனை தீர்த்து வைக்க வேண்டும் என, அவர் கோவிந்தசாமியிடம் போய் உதவி கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், ரமேஷிடம், “இது சரிபட்டு வராது... நான்லாம் பேசி தீர்த்து வைக்க வரவில்லை” என கோவிந்தசாமி சொன்னதாக தெரிகிறது. இதனால் கோவிந்தசாமி மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார் ரமேஷ்.

இதனையடுத்து கருவலூர் அருகேயுள்ள தோட்டத்து பகுதியில் வைத்து, கோவிந்தசாமியை மீண்டும் ஒருமுறை சொத்து தகராறு குறித்து பேச வருமாறு அழைத்துள்ளார் ரமேஷ். அப்போதும் கோவிந்தசாமி ஒத்துவரவில்லை என்பதால், அவரை ரமேஷ் கீழே தள்ளியதாகவும், அப்போது அவர் இறந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனைப்பார்த்து அதிர்ச்சியான ரமேஷ், என்ன செய்வது என தெரியாமல், அருகில் இருந்த ஆள்அரவமற்ற கோழிப்பண்ணை அருகே வைத்து, கோவிந்தசாமியின் உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். பின்னர் இரண்டு சாக்கு மூட்டைகளில் கட்டி குன்னத்தூர் அருகே இருக்கும் குளத்தில் வீசியதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். 

இதனைக் கேட்டு அதிர்ச்சடைந்த போலீசார், குளத்தில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது துர்நாற்றத்துடன் கரை ஒதுங்கிய மூட்டையை கைப்பற்றி பிரித்துப் பார்த்தனர். அதில் கோவிந்தசாமியின் உடல் பாகங்கள் இருந்தது தெரியவந்தது. அதேநேரம், கோவிந்தசாமியின் தலை, கை உள்ளிட்ட பாகங்கள் கிடைக்கவில்லை என்பதால், அதனை தீவிரமாக தேடி வருகின்றனர். சொத்து தகராறுக்கு பஞ்சாயத்து பேசவராத அண்ணனை, தம்பி துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்த சம்பவம், அவிநாசி பகுதி மக்களை அதிர்ச்சியில் உறை வைத்துள்ளது.