Tamilnadu Rain: தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழை... இது சென்னையை விட தரமான சம்பவம்!
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவதியடைந்தனர். வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், தாராபுரத்தனர், தான்தோன்றிமலை, காந்திகிராமம், வெங்கமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். தெருக்களில் மழை நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், தாராபுரத்தனர் பகுதியில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்துள்ளதால், சுமார் 5 கிராம மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
அதேபோல், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புவனகிரி, முட்லூர், காட்டுமன்னார்கோயில், சேத்தியாதோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. சிதம்பரத்தில் தாழ்வான பகுதியில் உள்ள கடைகள், வீடுகளில் மழைநீர் அதிக அளவு தேங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். மேலும், திருவண்ணாமலை பகுதிகளில் கனமழை பெய்ததால், செங்கம் அடுத்த சாத்தனூர் அணை, குப்பனத்தம் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் 119 அடியிலிருந்து தற்போது 98.70 அடியாக தண்ணீர் நிரம்பியுள்ளது. மலைப்பகுதிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் எந்நேரத்திலும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கனமழை குறைந்து சாரல் மழை நீடித்து வருவதால் இயல்புநிலை திரும்பியது. கனமழை குறைந்த நிலையில், வழக்கம் போல் பேருந்து, ரயில்கள் இயங்குகின்றன. மேலும் நீர்வழிப் பாதைகளில் உள்ள அடைப்புகள் போர்க்கால அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டதால் அழிக்கால், பிள்ளைத்தோப்பு மீனவ கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த கடல் நீர், நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. இதையடுத்து குழந்தைகள் உட்பட 70-க்கும் மேற்பட்டோரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தமிழகத்தின் பல்வேறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கர்நாடகா உட்பட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 18,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினி ஃபால்ஸ், உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதன் காரணமாக அனைத்து அருவிகளிலும் 4வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தொடர் மழை காரணமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு, நீர்வரத்து வினாடிக்கு 15,531 கன அடியிலிருந்து 16,196 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 90.87 அடியில் இருந்து 92 அடியாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிக கனமழை காரணமாக கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையின் வரையறுக்கப்பட்ட கொள்ளளவு 44.61 அடியாக உள்ள நிலையில், தொடர் மழை காரணமாக 43.49 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் வெளியான அப்டேட்டில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பதி, திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?