RB Udhayakumar About CM Stalin Delhi Visit : மதுரை மாவட்டம் சோழவந்தானில், அதிமுகவின் வளர்ச்சி பணி குறித்தும், மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று ஆலோசனை வழங்கினார். இதையடுத்து பேசிய அவர், கழக வளர்ச்சி பணி குறித்தும், மக்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் கழகப் பொதுச் செயளாலர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க, நான்கு மாதத்திற்கு ஒருமுறை கூட்டத்தை நடத்தி அதை மினிட் புக்கில் கையெழுத்து பெற வேண்டும் என்று ஆணையிட்டார். அதனைத் தொடர்ந்து, “தமிழகம் முழுவதும் கழக ரீதியில் 82 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. மக்களின் உள்ளூர் பிரச்சனையான குடிநீர், கல்வி ,சாக்கடை, வீட்டுமனை பட்டா முதல் அனைத்து பிரச்சினைகளையும் குரல் கொடுத்து மக்களிடம் சேர்ந்து நாம் போராட வேண்டும். அதேபோல் எடப்பாடியார் சாதனையை தெருமுனை பிரச்சாரம், திண்ணைப் பிரச்சாரம், பொதுக்கூட்டங்கள் வாயிலாக மக்களுக்கு நாம் எடுத்துரைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இன்றைக்கு ஸ்டாலின் டெல்லி செல்கிறார் ஏற்கனவே தமிழகத்திற்கு வரவேண்டிய கல்வி நிதி, மெட்ரோ நிதி ,ஜிஎஸ்டி நிதி இவற்றை வலியுறுத்தி பெற்று தருவாரா? அல்லது கச்சதீவு பிரச்சனை, காவிரி பிரச்சனை, முல்லை பெரியார் பிரச்சினை ஆகியவற்றை குரல் கொடுத்து காப்பாற்றுவாரா? ஸ்டாலின் எப்படி வெளிநாட்டில் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அதேபோன்றுதான் டெல்லியில் போட்டோவுக்கு போஸ் கொடுப்பார். அமெரிக்காவிற்கு சென்று எப்படி பூஜ்ஜியத்தை பெற்று தந்தாரோ அதேபோலத்தான் டெல்லிக்கு சென்று திரும்பும் போது பூஜ்ஜியத்தை தான் பெற்று வருவார்” என விமர்சனம் செய்தார்.
மேலும் படிக்க: மதுரையில் யார் பெரிய ஆள்…? என Instagram-ல் சவால் விட்டு ஸ்டேடஸ் வைத்த இளைஞர் வெட்டிக்கொலை!
மேலும், “மக்கள் பிரச்சனைக்காக அதிமுக எப்போதும் போராட தயங்கியதில்லை. தற்போது கூட சோழவந்தானில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக தகவல் வருகிறது அது பயனுள்ளதாக இருக்கிறதா அல்லது தொந்தரவாக இருக்கிறதா என்பதை ஒன்றிய கழகச் செயலாளர் பேரூர் கழகச் செயலாளர் மாவட்ட கழகத்திற்கு தெரிவித்தால் என்னுடைய தலைமையில் மக்களை திரட்டி போராட்டம் நடத்த தயாராக இருக்கிறேன்” எனக் கூறினார்.