'தங்கத்தில் ஏற்பட்ட பிளவு'.. ரஜினி-துரைமுருகன் மோதல் குறித்து வைரமுத்து விளக்கம்!

''நேற்று இரண்டு நகைச்சுவை முட்டிக் கொண்டது. நான் இவர்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டு தவித்தேன். ரஜினி திரைத் துறையில் நெருக்கமான நண்பர். துரைமுருகனும் என் நண்பர்'' என்று வைரமுத்து கூறியுள்ளார்.

Aug 26, 2024 - 18:44
 0
'தங்கத்தில் ஏற்பட்ட பிளவு'.. ரஜினி-துரைமுருகன் மோதல் குறித்து வைரமுத்து விளக்கம்!
Rajini Duraimurugan And Vairamuthu

சென்னை: தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்'  நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய 'சூப்பர் ஸ்டார்' நடிகர் ரஜினிகாந்த், ''பள்ளி ஆசிரியருக்கு பழைய மாணவர்களை சமாளிப்பது கஷ்டம். அதேபோல் திமுகவில் ஏராளமான பழைய மாணவர்கள் உள்ளனர். 

இந்த பழைய மாணவர்களை சமாளிப்பது மிகவும் கஷ்டம். ஆனால் ஸ்டாலின் அதை சரியாக செய்து கொண்டிருக்கிறார். துரைமுருகன்னு ஒருத்தர் இருக்கிறார். கலைஞர் கண்ணிலேயே விரலைவிட்டு ஆட்டினவரு. அவர் என்ன சொல்ல வருகிறார். ஒரு விஷயத்தில் பாராட்டுகிறாரா? இல்லை திட்டுகிறாரா? என்பது தெரியாது. ஆனால் ஸ்டாலின் சார் Hats off to You.'' என்று கூறியிருந்தார். 

விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மூத்த அமைச்சர் துரைமுருகன் அதிருப்தியில் உள்ளதாகவும் இதை வைத்தே ரஜினி பேசியதாக தகவல்கள் பரவின. இதனைத் தொடர்ந்து நேற்று அமைச்சர் துரைமுருகன் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ரஜினி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். 

இதற்கு பதில் அளித்த அவர், ''அதே மாதிரிதான் மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு விழுந்து, தாடி வளர்த்து என வயதான பிறகும் தொடர்ந்து நடிப்பதால் இளைஞர்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை. சொல்வது எல்லோருக்கும் சுலபம்'' என்று கூறினார். துரைமுருகனின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதற்கு துரைமுருகனின் ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்தனர்.இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் இரு தரப்புக்கும் இடையே வார்த்தை மோதல் நீடித்து வந்தது.

இதற்கிடையே இன்று காலை துரைமுருகன் பேசியது குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், ''அமைச்சர் துரைமுருகன் என்னுடைய நீண்ட கால நண்பர். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது. எங்கள் நட்பு எப்போதும் தொடரும்'' என கூறினார். இதேபோல் இன்று அமைச்சர் துரைமுருகனும், "நடிகர் ரஜினி பற்றி நான் நகைச்சுவையாக பேசினேன். நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம். ரஜினியும், நானும் எப்போதும் நண்பர்களாவே இருப்போம். அவருடன் எப்போதும் நட்பு தொடரும்" என தெரிவித்துள்ளார்.

இதனால் ரஜினி-துரைமுருகன் இடையேயான மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் ரஜினி-துரைமுருகன் பேசியது குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடந்த கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய வைரமுத்து, ''நேற்று இரண்டு நகைச்சுவை முட்டிக் கொண்டது. நான் இவர்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டு தவித்தேன். ரஜினி திரைத் துறையில் நெருக்கமான நண்பர். துரைமுருகனும் என் நண்பர். ரஜினி ஒரு நகைச்சுவை சொன்னார்.அதற்கு துரைமுருகன் ஒரு நகைச்சுவை சொன்னார். அது நேற்று வம்பாகிவிட்டது'' என்றார்.

தொடர்ந்து உங்கள் பகை கல்லில் விழுந்த பிளவா? தங்கத்தில் விழுந்த பிளவா? என கேள்வி எழுப்பிய கவிஞர் வைரமுத்து, இவர்களின் பிளவு என்பது தங்கத்தில் ஏற்பட்டது போல நெருப்பு வைத்தால் ஒட்டிக் கொள்ளும் எனக்கூறி கரகொலி செய்து இருவருக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் என விழாவில் கலந்து கொண்டவர்களிடம் கேட்டுக் கொண்டார். பெரியவர்கள் அப்படித்தான்; அவர்களின் நட்பு என்பது தண்ணீரில் அன்பு கிழித்தது போல என்றும் வைரமுத்து கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow