உலகம்

ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது பொருளாதார நடவடிக்கை: அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்!

ஈரானுக்கு உதவும் நாடுகள் கடுமையான பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது பொருளாதார நடவடிக்கை: அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்!
Donald Trump
ஈரானுக்கு நிதி அல்லது பிற வழிகளில் ஆதரவு அளிக்கும் நாடுகள் கடுமையான பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஒரு நாட்டின் மீது இதுவரை விதிக்கப்படாத அளவிலான மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா ஆயத்தமாகி வருகிறது.

தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், ஈரானுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதாரப் போரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளையும் அமெரிக்கா தொடங்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுக்கு ஏதேனும் ஒரு வகையில் நிதியுதவியோ அல்லது வாழ்வாதார உதவியோ அளிக்கும் எந்தவொரு நாடும் கடுமையான பொருளாதாரப் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என அவர் எச்சரித்தார். இருப்பினும், எந்தக் குறிப்பிட்ட நாட்டின் பெயரையோ அல்லது அவர்கள் மீதான தண்டனைகள் குறித்தோ அவர் தெளிவாகக் குறிப்பிடவில்லை. குறிப்பாக எண்ணெய் கடத்தல், பணப் பரிமாற்றங்கள், போலியான நிறுவனங்கள் மூலம் உதவிகளைச் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தனது நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள ஈரானுக்குப் பல வாய்ப்புகள் வழங்கப்பட்டும், அவர்கள் அதைப் பயன்படுத்தத் தவறிவிட்டதாக டிரம்ப் சாடினார். ஈரானின் இராணுவ வலிமை கடுமையாகப் பலவீனமடைந்துள்ளதாகவும், அந்நாட்டின் கடற்படை, விமானப்படை மற்றும் இராணுவத் தொழிற்சாலைகள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்நாட்டின் பொருளாதாரம் ஏற்கெனவே பெரும் நெருக்கடியில் உள்ள நிலையில், இந்த புதிய நடவடிக்கைகள் ஈரானை மேலும் முடக்கும் என்று டிரம்ப் கூறியுள்ளார். மேலும், ஈரான் எந்தச் சூழலிலும் அணுஆயுதத்தைப் பெற முடியாது என்ற தனது நிலைப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.