உலகம்

தாய், தம்பியை கொலை செய்த சிறுவன்.. ChatGPT-ஐ திறந்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அமெரிக்காவில் சொந்தத் தாயையும் 14 வயது தம்பியையும் படுகொலை செய்ததாக 17 வயதான அரவிந்த் என்ற இந்திய வம்சாவளிச் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

தாய், தம்பியை கொலை செய்த சிறுவன்.. ChatGPT-ஐ திறந்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
Indian Origin Teen Murders Mother and Brother In US

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள ஆக்டன் நகரில், சொந்தத் தாயையும் 14 வயது தம்பியையும் படுகொலை செய்ததாக 17 வயதான அர்ஜுன் அரவிந்த் என்ற இந்திய வம்சாவளிச் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

ஆக்டன்-பாக்ஸ்போரோ உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த அர்ஜுன், கடந்த 11 ஆம் தேதி அன்று தனது தாய் சுதா வெங்கடேசன் (45) மற்றும் தம்பி சித்தார்த் அரவிந்த் (14) ஆகிய இருவரையும் வீட்டில் வைத்துத் தாக்கிப் படுகொலை செய்துவிட்டு, தாயின் காரில் தப்பிச் சென்றதாகக் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்று மாலை 6:30 மணியளவில், வீட்டிற்கு வந்த ஆசிரியர் ஒருவர் கதவு திறக்கப்படாததால் அர்ஜுனின் தந்தைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். தந்தை உடனடியாக போலீசாரை தொடர்பு கொண்டு சோதனையிடக் கோரினார். அதன்பேரில் வீட்டிற்குச் சென்று பார்த்த போலீசார், அடித்தளத்தில் தாயின் உடலையும், முதல் தளத்தில் தம்பியின் உடலையும் கண்டெடுத்தனர்.

சம்பவ இடத்திலிருந்து அர்ஜுனும், அவரது தாயின் ஹோண்டா அக்கார்ட் காரும் மாயமாகியிருந்தது தெரியவந்தது. உடனடியாக அனைத்துப் பாதுகாப்பு முகமைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அன்று அதிகாலை அருகில் உள்ள வேலேண்ட் பகுதியில், கார் நிறுத்துமிடத்தில் நின்றிருந்த காரை ரோந்து போலீசார் பரிசோதித்தபோது, அதற்குள் இருந்த அர்ஜுன் கைது செய்யப்பட்டான். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அர்ஜுன் சமீபகாலமாக விசித்திரமான நடத்தையைக் வெளிப்படுத்தி வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, தனது குடும்பத்தினரைக் கொல்வது தொடர்பான கற்பனையான எண்ணங்கள் குறித்து இணையத்திலும், 'சேட்ஜிபிடி' (ChatGPT) செயற்கை நுண்ணறிவுத் தளத்திலும் அவன் தேடியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், 'கோதிக் நாவல்' (Gothic novel) பாணியிலான கதைகளை உருவாக்க உதவி கோரியும் அவன் அந்தத் தளத்தைப் பயன்படுத்தியுள்ளான். கோதிக் நாவல் என்பது மர்மம், பயம், அமானுஷ்ய நிகழ்வுகள், இருண்ட சூழல், பழமையான கோட்டைகள் போன்றவற்றை மையமாகக் கொண்ட நாவல் வகையாகும்.

அர்ஜுன் அரவிந்த் மீது இரண்டு கொலை வழக்குகள், குடும்ப உறுப்பினர்கள் மீதான தாக்குதல், அனுமதியின்றி வாகனம் ஓட்டியது மற்றும் வாகனத் திருட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிறார் நீதிமன்றத்தில் முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, கொலை வழக்கின் தீவிரத்தன்மை காரணமாக இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்படவுள்ளது.