தமிழ்நாடு

TN Weather: கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. வெளியான வானிலை அப்டேட்!

தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Weather: கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. வெளியான வானிலை அப்டேட்!
TN Weather
மதுரை, திருச்சி, திருவண்ணாமலை உள்பட 17 மாவட்டங்களில் இன்று (செப்.21) இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில், நேற்று மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத்தாழ்வு பகுதி இன்று (செப்.21) காலை 5:30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மத்தியகிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடைந்தது. தொடர்ந்து, காலை 8:30 மணி அளவில் மத்தியமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும். இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மத்தியமேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திர- தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளை 23 ஆம் தேதி காலையில் சென்றடையக்கூடும்.

கனமழை எச்சரிக்கை

இந்த நிலையில், இன்று வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை (செப்.22): 22-09-2026: மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை

சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.