அரசியல்

இடைத்தேர்தலில் பாமக ஆதரவு யாருக்கு? அன்புமணி அதிரடி பேட்டி!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முதல் விஜயின் லண்டன் பயணம் வரை பல்வேறு அரசியல் விவகாரங்களில் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தலில் பாமக ஆதரவு யாருக்கு? அன்புமணி அதிரடி பேட்டி!
Anbumani Breaks Silence on By-Poll Strategy
சென்னை கிண்டியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் மற்றும் மக்கள் சார்ந்த விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல், முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம், புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசினார்.

இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது :

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

மேலும், இந்த இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

லண்டன் பயணம் குறித்து அன்புமணி விமர்சனம் :

முதலமைச்சர் விஜய் மேற்கொண்ட லண்டன் பயணம் குறித்து கருத்து தெரிவித்த அன்புமணி, லண்டனில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான நிறுவனம் ஏற்கனவே சென்னையில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாக கூறினார்.

அந்த நிறுவனத்துடன் தமிழகத்திலேயே பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகற்கு எதிர்ப்பு :

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசின் முடிவுக்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார்.

சென்னைக்கு வெளியே போதுமான நிலப்பரப்பில் நிர்வாக நகரம் அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும், நகரத்தின் நெரிசலை கருத்தில் கொண்டு நீண்டகால திட்டமிடலுடன் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பரந்தூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியம் :

பரந்தூரில் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அன்புமணி, அந்த பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்றார்.

மக்களின் வாழ்வாதாரம் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் அரசு முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும், பாதிப்பு ஏற்படும் வகையில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டால் அதற்கு எதிராக போராடுவேன் என்றும் தெரிவித்தார்.

மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும் :

தொடர்ந்து பேசிய அன்புமணி, அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் குறை கூறுவதற்கு பதிலாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

வேலையில்லா திண்டாட்டம், நீர் மேலாண்மை, விவசாயிகளின் சிரமங்கள் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், கடந்த கால அரசுகளை விமர்சிப்பதை தொடர்ந்து செய்வதை விட, தற்போதைய ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.