அரசியல்

ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு - திமுகவின் முக்கிய நிகழ்ச்சி ஒத்திவைப்பு !

திமுகவின் முக்கிய நிகழ்ச்சி தொடர்பாக வெளியான திடீர் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு - திமுகவின் முக்கிய நிகழ்ச்சி ஒத்திவைப்பு !
DMK Postpones Mupperum Vizha Event
திமுக சார்பில் இன்று நடைபெற இருந்த முப்பெரும் விழா நிகழ்ச்சி, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் உடல்நலக்குறைவு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தந்தை பெரியார் பிறந்த நாள், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் இந்த விழா நடத்தப்படுகிறது.

அந்த வகையில், 2026-ஆம் ஆண்டுக்கான திமுக முப்பெரும் விழா சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், விழாவில் வழங்கப்பட உள்ள விருதுகள் பெறுவோர் பட்டியலையும் திமுக தலைமை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, இன்று நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மேலும், உடல்நலக்குறைவு காரணமாக பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா நிகழ்ச்சியிலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்பெரும் விழா ஒத்திவைப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், மு.க.ஸ்டாலினின் உடல்நிலையை கருத்தில் கொண்டு நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

திமுகவின் முக்கிய அரசியல் நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படும் முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய தேதி குறித்த அறிவிப்பை கட்சித் தலைமை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.