அரசியல்

காலையிலேயே அதிரடி.. கே.என்.நேரு வீட்டில் ரெய்டு.. திமுகவுக்கு கடும் நெருக்கடி!

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

காலையிலேயே அதிரடி.. கே.என்.நேரு வீட்டில் ரெய்டு.. திமுகவுக்கு கடும் நெருக்கடி!
KN Nehru

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்குச் சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) இன்று (அக். 29) மீண்டும் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு புகார்களின் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேருவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சியோடு சேர்த்து சென்னையிலும் நேருவுக்குத் தொடர்புடைய முக்கியப் பிரமுகர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் இந்தச் சோதனை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ரூ.634 கோடி முறைகேடு

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட 2,538 அரசுப் பணியிட நியமனங்களில் ரூ.634 கோடி வரை லஞ்ச முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி முதற்கட்ட சோதனை நடத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இரண்டாவது முறையாகச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நடவடிக்கை

இந்த வழக்குத் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து கே.என்.நேரு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்து, விசாரணையைத் தொடரப் பச்சைக்கொடி காட்டியது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்த அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

திமுகவுக்கு அரசியல் நெருக்கடி

ஏற்கனவே பள்ளிக்கல்வித் துறையில் ரூ.100 கோடி ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், திருச்சி பகுதியைச் சேர்ந்த மற்றொரு முன்னாள் அமைச்சர் வீட்டிலும் சோதனை நடைபெறுவது திமுக வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், திமுகவை பலவீனப்படுத்தவே இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.