அரசியல்

தவெக ஆட்சி கவிழ்க்க சதி: விசாரணைக்கு ஆஜராகாத செந்தில் பாலாஜி.. அடுத்தகட்ட நடவடிக்கை தீவிரம்!

தவெக ஆட்சி கவிழ்ப்பு வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் ஆஜராகாத நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தவெக ஆட்சி கவிழ்க்க சதி: விசாரணைக்கு ஆஜராகாத செந்தில் பாலாஜி.. அடுத்தகட்ட நடவடிக்கை தீவிரம்!
Senthil Balaji
தவெக ஆட்சியைத் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் இன்று போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாததால், காவல்துறை தரப்பில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியைத் கவிழ்ப்பதற்காக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாகத் திருநாவுக்கரசு, தியாகராஜன் உள்ளிட்ட 9 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கின் பின்னணியில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் இருப்பது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து, இன்று (ஜூலை 6) காலை 10.30 மணிக்குத் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், இருவரும் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இருவரும் விசாரணைக்கு ஆஜராகாததைத் தொடர்ந்து, அவர்களுக்கு மீண்டும் இரண்டாவது முறையாகச் சம்மன் அனுப்பத் திருவல்லிக்கேணி போலீசார் முடிவு செய்துள்ளனர். அதனையும் அவர்கள் புறக்கணிக்கும் பட்சத்தில், நீதிமன்றத்தின் மூலம் பிடியாணை (Warrant) பெற்று அதிரடியாகக் கைது செய்யத் தனிப்படையினர் திட்டமிட்டுள்ளனர். மேலும், இவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடிவிடக் கூடாது என்பதற்காக அனைத்துப் பன்னாட்டு விமான நிலையங்களுக்கும் 'லுக் அவுட்' நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.