அரசியல்

'மாறுவோம்... மாற்றுவோம்': பொதுத் தேர்தல்களில் போட்டி.. அண்ணாமலை அதிரடி!

இது நம்ம இயக்கம் என்று அண்ணாமலை அறிவித்ததும் ஆயிரக்கணக்கானோர் இணைந்துகொண்டேயிருக்கிறார்கள்.

'மாறுவோம்... மாற்றுவோம்': பொதுத் தேர்தல்களில் போட்டி.. அண்ணாமலை அதிரடி!
Annamalai
பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இன்று புதிய அரசியல் இயக்கம் தொடங்குவதாகவும், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் தங்களது புதிய இயக்கம் கண்டிப்பாகப் போட்டியிடும் என்றும் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தனது ராஜினாமாவை பாஜக தலைமை ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, இன்று மதியம் 12 மணிக்கு அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கங்களில் நேரலையில் தோன்றி இந்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், "புதிய அரசியல், புதிய பாதை, புதிய இயக்கம் இன்று முதல் தொடங்குகிறது. என்னுடைய கருத்துகளுக்குப் பாஜக தலைமை செவிசாய்க்காததால், அடிப்படை கட்டமைப்பை மாற்றும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளேன்" என்று கூறினார்.

தேசியக் கட்சிகளின் மொழி தமிழக மக்களுக்குப் புரிவதில்லை என்று குறிப்பிட்ட அவர், கடந்த 18 மாதங்களாகப் பாஜகவுடன் கருத்து வேறுபாடு நீடித்ததாகவும், கடந்த டிசம்பர் 4, 2025 அன்றே தனது விலகல் முடிவைத் தலைமைக்குத் தெரிவித்துவிட்டதாகவும் கூறினார். ஆனால், சட்டமன்றத் தேர்தலை முடித்துவிட்டு முடிவெடுக்குமாறு தலைமை அறிவுறுத்தியதால், அதுவரை தேர்தல் களத்தில் பணியாற்றியதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

ரஜினிகாந்த் அழைப்பு குறித்த விளக்கம்

தனது அரசியல் பயணம் குறித்த யூகங்களுக்குப் பதிலளித்த அண்ணாமலை, கடந்த 2020-ஆம் ஆண்டில் நடிகர் ரஜினிகாந்த் தன்னைத் தனது கட்சியில் சேருமாறு அழைத்ததாகக் குறிப்பிட்டார். ஆனால், அந்த அழைப்பை மறுத்துவிட்டுத் தான் பாஜகவில் இணையப் போவதாக அவரிடம் தெளிவாகக் கூறியதாகத் தெரிவித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடனான தனது நட்பு மிகவும் பெரியது என்றும் அவர் நேரலையில் பகிர்ந்துகொண்டார்.

இயக்கத்தின் கொள்கையும் இணையதள அறிமுகமும்

பிம்ப அரசியலைத் தவிர்த்து, சாமானியர்களுக்கான அரசியலை முன்னெடுப்பதே தனது இலக்கு என்று அண்ணாமலை தெரிவித்தார். சிறந்த மூளைகளை அரசியலுக்குக் கொண்டு வரப் போவதாகக் கூறிய அவர், முதலில் இயக்கமாகத் தொடங்கிப் பலரையும் இணைத்து, அரசியல் கற்றுக்கொடுத்த பின்னரே இது கட்சியாக மாற்றப்படும் என்றார். "மாறுவோம்... மாற்றுவோம்" என்பதே இந்த இயக்கத்தின் கொள்கை முழக்கமாகும்.

இதற்கிடையே, 'இது நம்ம இயக்கம்' என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய இணையதள முகவரியையும் (https://wetheleader.org/) அவர் வெளியிட்டுள்ளார். இந்த இயக்கம் தொடங்கப்பட்ட குறுகிய நேரத்திற்குள்ளேயே இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.