இந்தியா

SIR-சதியால் மு.க.ஸ்டாலின் தோற்கடிப்பு.. மீண்டும் போராட்டம் வெடிக்கும்.. எச்சரிக்கும் CJP!

"பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து பிரசாரத்தை மேற்கொண்ட ஸ்டாலின், பினராய் விஜயன், மம்தா பானர்ஜி என ஒவ்வொருவராக தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்" என்று அபிஜித் திப்கே குற்றம்சாட்டியுள்ளார்.

SIR-சதியால் மு.க.ஸ்டாலின் தோற்கடிப்பு.. மீண்டும் போராட்டம் வெடிக்கும்.. எச்சரிக்கும் CJP!
CJP
சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) விவகாரத்தில் மு.க.ஸ்டாலின், மமதா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களின் தொகுதிகளில் திட்டமிட்டு வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) நிறுவனத் தலைவர் அபிஜித் திப்கே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 48 மணி நேரத்திற்குள் பதவி விலக வேண்டும் எனக் கெடு விதித்துள்ளார்.

புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அபிஜித் திப்கே பேசுகையில், "2024 மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெறத் தவறியதைத் தொடர்ந்து, மாநில கட்சிகளின் எழுச்சியைக் கண்டு பயந்து இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

குறிப்பாக மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜியின் தொகுதியில் எஸ்ஐஆர் சதியால் 50,000 வாக்குகள் நீக்கப்பட்டு, அவர் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதேபோல தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலினின் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டு, அவர் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தொகுதியில் 40,000 வாக்குகளும், கேரளாவில் பினராயி விஜயனின் வெற்றி வாய்ப்பும் வாக்காளர் நீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து பிரசாரத்தை மேற்கொண்ட ஸ்டாலின், பினராய் விஜயன், மம்தா பானர்ஜி என ஒவ்வொருவராக தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இது தற்செயல் நிகழ்வு போல தெரியவில்லை. இதன் பின்னால் ஒரு Pattern தென்படுகிறது" என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

நாடு முழுவதும் மொத்தம் 13 கோடிக்கும் அதிகமான வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், "2024 தேர்தலில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே 2% மட்டுமே வித்தியாசம் இருந்தது. இந்த இடைவெளியை அதிகரித்துத் தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பதற்காகவே திட்டமிட்டு வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன.

ஜனநாயகம் என்பது மக்கள் அரசைத் தேர்ந்தெடுப்பது; ஆனால் ஞானேஷ் குமார் தேர்தல் ஆணையரான பிறகு யார் வாக்களிக்க வேண்டும் என்பதை அரசே தீர்மானிக்கும் நிலை உருவாகியுள்ளது. உத்தவ் தாக்கரேவின் கட்சியைப் பிரித்து அதன் சின்னத்தைப் பறித்ததிலும் தேர்தல் ஆணையத்தின் தலையீடு இருந்தது" எனச் சாடினார்.

சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடைபெற வேண்டுமானால் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்திய அபிஜித் திப்கே, "அவர் இன்னும் 48 மணி நேரத்திற்குள் ராஜினாமா செய்யாவிட்டால், காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் நாடு தழுவிய அளவில் தீவிரப் போராட்டம் நடத்தப்படும். அவர் பதவி விலகும் வரை போராட்டம் ஓயாது" என எச்சரித்துள்ளார்.

மேலும் வரவிருக்கும் தேர்தல்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், SIR நடவடிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.