SCENE ட்ரைலர் : ACTION, COMEDY, TWIST & TURNS - உடன் வெளிவந்து வைரல் !

SCENE ட்ரைலர் : ACTION, COMEDY, TWIST & TURNS - உடன் வெளிவந்து வைரல் !

சூர்யாவின் 'சீன்' பட ட்ரைலர் வெளியாகியுள்ள நிலையில், ட்ரைலரில் இடம்பெற்ற அரசியல் வசனம், நஸ்ரியாவின் ஆக்‌ஷன் அவதாரம், நஸ்லனுடனான மோதல் என ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

Author: Santhosh சினிமா

நடிகர் சூர்யா நடிப்பில், மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள 'சீன்' (SCENE) திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. "கெரியரின் உச்சத்தில் இருக்கிறாய்... இப்போது வேலையை ராஜினாமா செய்துவிட்டு என்ன செய்யப் போகிறாய்?" என்ற கேள்விக்கு, "பாலிடிக்ஸ் சேரப் போறேன்!" என சூர்யா பதிலளிக்கும் காட்சி ட்ரைலரில் கவனம் ஈர்த்துள்ளது.

'ஆவேஷம்', 'ரோமாஞ்சம்' படங்களின் மூலம் கவனம் பெற்ற ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள இப்படத்தில், அவர் இன்பராஜ் என்ற ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். தனது உயர் அதிகாரியான ஸ்டீபன் (லால்) விடுக்கும் அழைப்பை ஏற்று, ஒரு கொலை வழக்கை விசாரிக்க மீண்டும் காவல்துறைக்குத் திரும்புகிறார் இன்பராஜ்.

ட்ரைலரின் தொடக்கத்தில் காவல்துறைப் பணியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் ஓய்வெடுக்க விரும்பும் இன்பராஜை, அலுவலகத்திற்கு வருமாறு உயர் அதிகாரி ஸ்டீபன் தொடர்ந்து அழைக்கிறார். ஆனால், அவரது உத்தரவுகளைப் பொருட்படுத்தாமல் இருக்கும் இன்பராஜை அழைத்து வர காவலர்களை வீட்டிற்கே அனுப்புகிறார். அவர்களிடமும் ஒத்துழைக்க மறுக்கும் இன்பராஜ், தன்னைத் தூக்கிச் செல்லுங்கள் என கைகளைத் தூக்கிக் காட்டும் காட்சி நகைச்சுவையாக அமைந்துள்ளது.

தொடர்ந்து ஸ்டீபன் அலுவலகத்தில் நடைபெறும் உரையாடலில், "Career-ன் உச்சத்தை விட்டுட்டு என்னடா பண்ண போற... Politics சேரப் போறேன்!" என சூர்யா பதிலளிக்கிறார். இந்த வசனம் ட்ரைலரில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதுமட்டுமின்றி , இந்த வார்த்தைகளை தமிழ்நாட்டின் CM முதன்முதலில் கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையே, வீட்டுப் பணிக்காக ஆள் தேடும் இன்பராஜின் வீட்டிற்கு நஸ்ரியா நடித்துள்ள மாயா வருகிறார். ஆரம்பத்தில் சாதாரண வீட்டுப் பணிப்பெண் போல அறிமுகமாகும் மாயா, அடுத்தடுத்த காட்சிகளில் அதிரடியான சண்டைக் காட்சிகளில் ஈடுபடுகிறார். இதன் மூலம் அவரது கதாபாத்திரத்தைச் சுற்றி ஒரு மர்மமும் இருப்பது தெரிய வருகிறது.

மேலும், நஸ்லன் ஈஸ்வரன் என்ற கொடூரமான குற்றவாளியாக நடித்துள்ளார். புத்திசாலித்தனமும் திட்டமிடும் திறனும் கொண்ட ஈஸ்வரனை வீழ்த்த, அவருக்கு இணையான திறமை கொண்ட ஒருவரால் மட்டுமே முடியும் என ட்ரைலர் உணர்த்துகிறது. சூர்யாவின் இன்பராஜைத் தனது சரியான எதிரியாக ஈஸ்வரன் கருதும் நிலையில், "நான் உனக்கு இணையானவனா?" என இன்பராஜ் கேட்கும் வசனமும் கவனம் பெறுகிறது.

மர்மம், கொலை விசாரணை, அதிரடி சண்டைகள், நகைச்சுவை எனப் பல அம்சங்கள் கலந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக 'சீன்' உருவாகியிருப்பதை ட்ரைலர் வெளிப்படுத்துகிறது. இறுதியில் சூர்யாவின் 'சிங்கம்' படத்தில் இடம்பெற்ற "ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு டா!" என்ற பிரபலமான வசனத்தை நினைவூட்டும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தங்களது 2D Entertainment மற்றும் Zhagaram Studios நிறுவனங்கள் சார்பில் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். நஸ்ரியா நஸிம், நஸ்லன், லால், ஆனந்தராஜ், ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை வீனீத் அகஸ்தியன் மேற்கொள்ள, படத்தொகுப்பை அஜ்மல் சாபு கவனித்துள்ளார். தமிழ்ப் பதிப்பிற்கான வசனங்களை பிரபல YOUTUBE பிரபலமான டிராவிட் செல்வம் எழுதியுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'சீன்' திரைப்படம் வரும் நவம்பர் 6, 2026 அன்று தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதே நாளில் சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படமும் வெளியாகவுள்ளது.

சூர்யாவின் அதிரடி, ஜித்து மாதவனின் நகைச்சுவை கலந்த திரைக்கதை, நஸ்ரியாவின் ஆக்‌ஷன் அவதாரம் எனப் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 'சீன்' திரைப்படம் ரசிகர்களை எந்த அளவிற்கு கவரும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!