மெட்ரோவில் இரவைக் கழித்த 'Game of Thrones' சீரிஸ் நடிகர்... இதுக்குப் பின்னாடி இப்படியொரு கதையா?

மெட்ரோவில் இரவைக் கழித்த 'Game of Thrones' சீரிஸ் நடிகர்... இதுக்குப் பின்னாடி இப்படியொரு கதையா?

உலகப் புகழ்பெற்ற 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரில் ஜெய்மி லானிஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் நிக்கோலஜ் கோஸ்டர்-வால்டாவ், உக்ரைனில் ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக, அந்நாட்டு மக்களுடன் மெட்ரோ ரயில் நிலையத்தில் இரவைக் கழித்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

Author: Bhavani சினிமா

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக நிக்கோலஜ் கோஸ்டர்-வால்டாவ் அங்கு சென்றுள்ளார். ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (UNDP) நல்லெண்ணத் தூதராகச் செயல்பட்டு வரும் அவர், போரால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை நேரில் பார்வையிட்டு வருகிறார்.

இந்தச் சூழலில், கடந்த புதன்கிழமை இரவு உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ரஷ்யாவின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்குள்ள பொதுமக்களுடன் இணைந்து நடிகர் நிக்கோலஜும் மெட்ரோ ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. அதில், நீல நிற UNDP ஹூடி, காக்கி நிற கால்சட்டை அணிந்திருந்த நடிகர், மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த படுக்கையில் ஓய்வெடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தன்னுடன் தேவையான பொருட்கள் அடங்கிய பையையும் அவர் எடுத்துச் சென்றிருந்தார்.

"நான் ஒரு நாள் மட்டுமே அனுபவித்தேன்... உக்ரைன் மக்களுக்கு இது அன்றாட வாழ்க்கை!"

தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட நிக்கோலஜ், அந்த இரவு மிகவும் கடினமானதாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "நான் ஒரே ஒரு இரவு மட்டுமே இங்கு தங்கிவிட்டு, இந்த அனுபவத்தைப் பற்றிச் சொல்லிவிட முடியும். ஆனால், ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்களுக்கு ஏவுகணைத் தாக்குதல்களின்போது பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைவது அன்றாடத் தேவையாக இருக்கிறது. பொதுமக்களுக்கு நாம் தொடர்ந்து உதவ வேண்டும். நாம் அனைவரும் ஏற்றுக்கொண்ட சர்வதேச விதிமுறைகளையும் மதித்துப் பாதுகாக்க வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், அக்டோபர் 27 முதல் 29-ம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் கீவ் நகரில் சிவப்பு நிற வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்டையும் அவர் பகிர்ந்துள்ளார்.

எதற்காக உக்ரைன் சென்றார் நிக்கோலஜ்?

உக்ரைனில் போர் காரணமாகப் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளை உலக நாடுகளின் கவனத்துக்குக் கொண்டு செல்வதே நிக்கோலஜின் இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

இது தொடர்பாக ஒரு செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், உக்ரைன் மக்களுக்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு தொடர்ந்து கிடைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

"உக்ரைன் மக்கள் மிகச் சிறப்பாகப் போராடி வருகின்றனர். இருப்பினும், அவர்களுக்கு சர்வதேச சமூகத்தின் உதவி தேவைப்படுகிறது. குறிப்பாக, குளிர்காலம் நெருங்கி வரும் இந்தச் சூழலில் உதவிகள் மிகவும் அவசியம். உக்ரைனை உலக நாடுகள் மறந்துவிடக் கூடாது" என அவர் தெரிவித்துள்ளார்.

2016 முதல் ஐ.நா. நல்லெண்ணத் தூதர்!

நிக்கோலஜ் கோஸ்டர்-வால்டாவ் கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (UNDP) நல்லெண்ணத் தூதராகச் செயல்பட்டு வருகிறார். பருவநிலை மாற்றம், பாலின சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூக நலன் சார்ந்த முன்னெடுப்புகளிலும் அவர் தொடர்ந்து பங்கெடுத்து வருகிறார்.

குறிப்பாக, HBO நிறுவனத்தின் பிரபலமான 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரில் ஜெய்மி லானிஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். 2011 முதல் 2019 வரை எட்டு சீசன்களாக ஒளிபரப்பான இந்தத் தொடரில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தத் தொடருக்காக சிறந்த துணை நடிகருக்கான எம்மி விருதுக்கு 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை பரிந்துரைக்கப்பட்டார்.

திரையில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர், தற்போது போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுடன் ஒரு இரவைக் கழித்திருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.