தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டம்... கதை சொல்லலில் தடுமாற்றம்! ராமாயணம் திரை விமர்சனம்!

தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டம்... கதை சொல்லலில் தடுமாற்றம்! ராமாயணம் திரை விமர்சனம்!

நிதிஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள ராமாயணம் திரைப்படம் பிரம்மாண்டமான கிராபிக்ஸ் மற்றும் போர்க்களக் காட்சிகளால் வியக்க வைக்கிறது.

Author: Bhavani சினிமா

ஒரு நாவலை திரைப்படம் ஆக்குவதே மிகப்பெரிய சவால்... அப்படியிருக்க இதிகாச புராணங்களுக்கு திரை வடிவம் கொடுப்பது என்றால்  அது சவாலுக்கே சவால்... அதை சமாளிக்க பல வழிகளில் முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் நிதிஷ் திவாரி...

இயக்குநருக்கு முதல் சவால் கதையை எதிலிருந்து, எப்படி ஆரம்பிப்பது..?என்பதுதான். தேவர்களுக்கும் அசுரர்களுக்குமான மோதல் என்று ஆரம்பித்தால் ஆரம்பமே ஆக்‌ஷனில் கலக்கலாம் என்று போரில் ஆரம்பமாகிறது படம்... இந்திரனின் பறக்கும் வெள்ளை யானை, அசுரகுல தலைவன் சுமாலியின் காண்டாமிருகம் படை என ஓப்பனிங்க்லயே கிராபிக்ஸில் கலக்கியிருக்கிறார்கள். 

அசுரகுல தலைவன் சுமாலியின் மகள் கைகசியாக வரும் ஷோபனா போரில் தேவர்களின் படையை துவம்சம் செய்வது மிடுக்கு. போரில் தோற்ற பின் தேவர்களுக்கு அடிமையாகி, மலை குகையில் சித்திரவதைக்குள்ளாகி, பின்னர் மகன் ராவணன் பெரியவனானதும் இலங்கையை கைப்பற்றி மூவுலகுக்கும் அவனை அரசனாக்குவது அமர்க்களம்.

ஜனரஞ்சக சினிமாவில் வில்லன் வலிமையாக இருந்தால் தான் அவனை வீழ்த்தும் ஹீரோவுக்கு கெத்து. அதே பாணியில் முதல் பாகம் முழுக்க ராவணனுக்கு வலிமை சேர்த்திருக்கிறது ராமாயணம்.  

ராமராக வரும் ரன்பீர் கபூர் ராமர் வேடத்துக்கு பொருத்தமாக இருக்கிறார்... ஆனால், ராமனின் இயல்புகளும், உடல் மொழியும் அவருக்கு தெளிவாக விளக்கப்படாதது போல் அவரது நடிப்பில், பாவனையில் குழப்பம் தெரிகிறது. 

சீதை சாய்பல்லவிக்கு பெரும்பாலும் சிரிப்பதை தவிர வேறு வேலை இல்லை. இடைவேளைக்குப் பின் சண்டை காட்சிகளில் ஒரு இளவரசியின் வீரம் அபாரமாக தெரிகிறது. ராவணனின் தங்கை சூர்ப்பனையாக வரும் ரகுல் ப்ரீத் சிங் தேவதை போல் இருக்கிறார். கண் முன்னால்   தன் கணவரை அண்ணன் ராவணன் கொல்லும் காட்சியில் அற்புதமாக நடித்திருக்கிறார்... மண்டோதரியாக வரும் காஜல் அகர்வால் கண்ணுக்கு அழகு, காட்சிகள் குறைவு... ராவணன் -  யாஷ், லட்சுமணன் -  ரவிதுபே, கைகேயி -  லாராத்யத்தா நல்ல தேர்வு, சிறப்பாக நடித்திருக்கின்றனர். 

ராட்சஷ பருந்துவான ஜடாயூ சீதையை காப்பாற்ற ஆகாயத்தில் ராவணனுடன் மோதும் காட்சி  பிரம்மாண்டமாகவும், மிகுந்த உணர்ச்சி பூர்வமாகவும் இருக்கிறது. சீதை கடத்தப்படுவதன் வலியை அந்த ஒரு காட்சிதான் ரசிகனுக்கு உணர்துகிறதே தவிர, ராமனின் ஏக்கமோ, லட்சுமணனின் கோபமோ எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாதது திரைக்கதையின் பலவீனம்.

மேக்கிங்கை பொறுத்தவரை கிராஃபிக்ஸில் போர்க்கள காட்சிகள் ஆச்சர்யப்படுத்தினாலும், ராமாயண காலத்தின் மனிதர்களின் வாழ்க்கையை, அந்தக் கால நகரங்களின் அமைப்புகளை நம் கண் முன் புதுமையாக தோற்றுவிக்க தவறிவிட்டன. வழக்கமான அரசவைகள், கோட்டைகள், சிம்மாசனங்கள் என எல்லாமே சலிப்பு. உடைகள், ஆபரணங்கள் கூட  அழகாக இருக்கிறதே தவிர, காலத்தின் தன்மை அதில் இருப்பதாக தெரியவில்லை. 

இசையிலும் கூட பிரம்மாண்டமும், புதுமையும் தெரிகிறதே தவிர, தொன்மையும், தெய்வீகமும், உணர்வும் மிஸ்ஸிங். ஹான்ஸ் ஜிம்மர், ரஹ்மான் கூட்டணி ஆச்சர்யப்படுத்தினாலும் வசியப்படுத்தவில்லை. 

இந்தியாவில் ராமாயணம் எத்தனை முறை படமாக்கப்பட்டாலும் தென்னிந்தியாவை பொறுத்தவரை தெலுங்கில் எடுக்கப்பட்ட சம்பூர்ண ராமாயணத்துடன் தான் அவை ஒப்பிடப்படும். கதை சொல்லலிலும், வசனங்களிலும், காட்சி அமைப்பிலும் அதில் இருக்கும் உணர்வும், தெய்வீகத்தன்மையும் அடுத்து வருபவைகளில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது என்பதுதான் யதார்த்தமாக இருக்கிறது. 

வில்லுப்பாட்டு, கூத்து, போன்ற கிராமிய கலைகளில், இராமாயணமும், மகாபாரதமும் தலைமுறை தலைமுறையாக அதன் தொன்மையும் ரசனையும், கலைநயமும், விறுவிறுப்பும்  குறையாமல் கடத்தப்படும் பொழுது சினிமா மட்டும் ஏன் சறுக்குகிறது?  சீதா சுயம்வரத்தை ஒரு வில்லுப்பாட்டு கலைஞர் விவரிக்கும் போது நம் முன் விரியும் கற்பனை உலகத்திற்கு முன் இந்த நவீன கிராபிக்ஸ் காட்சிகள் ஒன்றுமே இல்லை. 

என்னதான் தொழில்நுட்பமும், பொருளாதார பலமும் சினிமாவுக்கு அபரிமிதமாக இருந்தாலும் பாரம்பரிய கலைஞர்களிடம் இருக்கும் ஞானமும், ஈடுபாடும் சினிமா படைப்பாளிகளிடம் இல்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது... 

(இளையரவி)

ராமாயணம் - கிராபிக்ஸ் யுத்தம்

3 ஸ்டார்