கடந்த 2003-2004ஆம் ஆண்டுகளில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘விருமாண்டி’. இந்தப் படத்துக்கு முதலில் ‘சண்டியர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டது. ஆனால், அந்தப் பெயர் சாதிய மோதல்களைத் தூண்டும் வகையில் இருப்பதாக அப்போது பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, படத்தின் தலைப்பு ‘விருமாண்டி’ என மாற்றப்பட்டு வெளியானது.
இந்நிலையில், சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘சண்டியர்’ என்ற தலைப்பில் புதிய படத்தை உருவாக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ராஜ்மோகனைச் சந்தித்து மனு அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கமல்ஹாசனின் ‘சண்டியர்’ படத் தலைப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், இந்தத் தலைப்பால் சாதி மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். எந்தக் காரணத்தைக் கொண்டும் ‘சண்டியர்’ என்ற தலைப்பில் படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
மேலும், “தேவர் மகன் திரைப்படத்தால் தென் மாவட்டங்களில் சாதி மோதல்கள் ஏற்பட்டன. தற்போது ‘சண்டியர்’ படத்தின் தலைப்பின் மூலம் தமிழ்நாட்டில் வன்மத்தை வளர்க்க கமல்ஹாசன் நினைக்கிறார்” என்றும் குற்றம்சாட்டினார்.
கமல்ஹாசன் அரசியல் கட்சியின் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கும் நிலையில், சாதிய அடையாளத்தை நினைவுபடுத்தும் வகையிலான தலைப்பைப் பயன்படுத்துவது அவரது பொறுப்புக்கு ஏற்றதல்ல என்றும் கிருஷ்ணசாமி விமர்சித்தார்.
ஏற்கெனவே ‘சண்டியர்’ தலைப்பு தொடர்பாக எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், தற்போது கிருஷ்ணசாமி அமைச்சர் ராஜ்மோகனிடம் மனு அளித்திருப்பது இந்த விவகாரத்தை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது. கமல்ஹாசன் தரப்பில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகியுள்ளதா என்பது அடுத்தகட்ட கவனத்தைப் பெற்றுள்ளது.
LIVE 24 X 7









