நடிகர்கள் வடிவேலு மற்றும் பிரபுதேவா இணைந்து நடித்துள்ள 'பேங் பேங்' திரைப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இப்போட்டியில் படத்தின் தயாரிப்பாளரும், முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் சம்மந்தியுமான கண்ணன் ரவி கலந்துகொண்டு, தனது மகனின் திருமணம் மற்றும் தன் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்துச் செய்தியாளர்களிடம் விரிவாக விளக்கம் அளித்தார்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்திக்கும், தயாரிப்பாளர் கண்ணன் ரவி மகனுக்கும் சமீபத்தில் வைதீக முறைப்படி திருமணம் நடைபெற்றது திராவிட இயக்கத்தினர் மற்றும் திக தலைவர் வீரமணி இடையே விமர்சனத்தை ஏற்படுத்தியது. இது குறித்துப் பேசிய கண்ணன் ரவி, "திருமணம் என்பது இரு குடும்பங்களின் விருப்பம் சார்ந்த விஷயம். துரைமுருகன் திமுகவின் கொள்கைப்படி சுயமரியாதை திருமணம் செய்யவே விரும்பினார். ஆனால் எனது மற்றும் என் மனைவியின் விருப்பத்தின் காரணமாகவே இந்து வைதீக முறைப்படி திருமணம் நடத்தினோம். திராவிட இயக்கங்களில் உள்ள பலர் கோயில்களுக்குச் செல்லும் சூழலில், இதில் எந்தக் குறுகிய மனப்பான்மையும் இல்லை," என்று தெளிவுபடுத்தினார்.
தான் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் துரைமுருகன் ஆகியோரின் பினாமி என்றும், தன்னிடம் ரூ.65,000 கோடி பணம் இருப்பதாகக் கூறப்படும் புகார்களுக்குப் பதிலளித்த அவர், "நான் 7 வயதில் தந்தையை இழந்து, துபாயில் சட்டப்பூர்வமாக உழைத்துச் சம்பாதித்தவன். தன்னிடம் ரூ.65,000 கோடி இருப்பதாகக் கூறுபவர்கள் அதை நிரூபித்தால் அவர்களுக்குத் தலா ரூ.5 கோடி தருகிறேன். அரசியலைப் பொறுத்தவரை, சொந்த ஊரான திட்டக்குடியில் மக்களுக்கு நன்மைகள் செய்வதற்காகக் களம் காண்பேன். அது தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டதே," என்று தெரிவித்தார்.
சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் வடிவேலு - பிரபுதேவா மீண்டும் இணைந்து நடித்துள்ள 'பேங் பேங்' படம் குறித்துப் பேசிய அவர், வடிவேலு படப்பிடிப்பில் பிரச்சினை தருவார் என்று பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றார். மேலும், எதிர்காலத்தில் கதாநாயகனாக இல்லாமல் மூர்க்கத்தனமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவே தனக்கு விருப்பம் இருப்பதாகவும் கண்ணன் ரவி குறிப்பிட்டார்.
LIVE 24 X 7









