சினிமா

"ரஜினி சார் மேல இருக்க மரியாதைக்காக.." தனுஷ் எடுத்த முக்கிய முடிவு!

சூப்பர் ஸ்டார் ரஜினி மீது கொண்ட மரியாதைக்காக ‘ஓம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.


OM Movie
தமிழ் சினிமாவில் இரு பெரும் நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நேரத்தில் திரைக்கு வரும்போது திரையரங்குகள் ஒதுக்கீடு மற்றும் வசூலில் கடும் போட்டி ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், நடிகர் தனுஷின் 55-வது படமான ‘ஓம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், ஸ்ரீலீலா, சாய் பல்லவி, மம்முட்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படம் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதேநேரத்தில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஒரே நாள் இடைவெளியில் ரஜினி - தனுஷ் இருவரின் படங்களும் களமிறங்க இருந்ததால், திரையரங்குகள் ஒதுக்கீடு மற்றும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் பெரிய போட்டி உருவாகும் சூழல் நிலவியது.

திரையரங்குப் போட்டியையும் சினிமா வர்த்தகத்தையும் கருத்தில் கொண்டு ‘ஓம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைப்பதாக தனுஷ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் மீது கொண்ட மரியாதை காரணமாகவே 'ஓம்' படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளோம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்றும் 'ஓம்' வெளியாகாது. பெரிய படங்களுக்கு இடையே பரஸ்பர புரிதல் இருக்க வேண்டும் என்ற சினிமா நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் ரிலீஸ் தேதியை அறிவித்த மற்ற திரைப்படங்களின் உரிமையை மதித்து தனுஷ் எடுத்துள்ள இந்த முடிவுக்குத் திரை உலகில் வரவேற்பு கிடைத்துள்ளது. வர்த்தக வட்டாரங்களின்படி 'ஓம்' திரைப்படம் நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பரில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் விரைவில் புதிய ரிலீஸ் தேதியை முறைப்படி அறிவிக்கும் எனத் தெரிகிறது.