'என் மகள் மது பழக்கத்திற்கு அடிமையா?' - மகளுக்காக அதிரடி காட்டிய ACTION KING !

'என் மகள் மது பழக்கத்திற்கு அடிமையா?' - மகளுக்காக அதிரடி காட்டிய ACTION KING !

இளைய மகள் திருமணத்தைத் தொடர்ந்து மூத்த மகள் ஐஸ்வர்யா குறித்து சமூக வலைதளங்களில் எழுந்த சர்ச்சைகள் மற்றும் அவதூறு கருத்துகளுக்கு நடிகர் அர்ஜுன் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை மற்றும் அதுதொடர்பான புகார் நடவடிக்கையும் தற்போது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது!

Author: Santhosh V சினிமா

நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவின் திருமணப் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் பெற்ற நிலையில், தற்போது அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா குறித்த விவாதங்கள் சர்ச்சையாக வெடித்துள்ளன. மகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக நடிகர் அர்ஜுன் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

அஞ்சனா திருமணத்தில் எழுந்த சர்ச்சை!

நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவின் திருமணம் சமீபத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திருமண விழாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதும் ரசிகர்கள் பலரும் மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அதே நேரத்தில், திருமண நிகழ்வில் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா மட்டும் தனியாகக் கலந்து கொண்டதாகக் கூறி சிலர் கேள்விகளை எழுப்பத் தொடங்கினர்.

நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதியை காதலித்துத் திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யாவின் திருமண வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சினையா? கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டாரா? என்றெல்லாம் சமூக வலைதளங்களில் யூகங்கள் பரவின. இதனைத் தொடர்ந்து சில யூடியூப் சேனல்களிலும் ஐஸ்வர்யாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு விமர்சனங்களும் வீடியோக்களும் வெளியாகின.

மகள் குறித்து பரவும் அவதூறு... அர்ஜுன் கடும் கண்டனம்!

இந்த விவாதங்கள் ஒருபுறம் இருக்க, ஐஸ்வர்யாவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக நடிகர் அர்ஜுன் வேதனை தெரிவித்துள்ளார். குறிப்பாக, தனது மகளை மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்று சிலர் தவறாகச் சித்தரிப்பதாகக் குறிப்பிட்டு கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில், முதலில் தனது இளைய மகள் அஞ்சனாவின் திருமணத்திற்கு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். தங்களது குடும்பத்தின் மகிழ்ச்சியான தருணத்தில் அன்பையும் வாழ்த்துகளையும் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.





“மகளின் தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்க வேண்டும்!”

தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இதுவரை பொதுவெளியில் பேசுவதைத் தவிர்த்து வந்ததாக அர்ஜுன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், விருப்பப்படி வாழும் சுதந்திரமும் இருக்கிறது என்றும், தனது வாழ்க்கை குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய நேரம் வந்தால் ஐஸ்வர்யாவே அதனைத் தெரிவிப்பார் என்றும் கூறியுள்ளார்.

ஆனால், ஒரு தந்தையாக தனது மகளின் குணம், நற்பெயர் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைக் குறிவைத்து ஆதாரமற்ற, இழிவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றும் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுவாழ்க்கையில் இருப்பவர்களைப் பற்றி விமர்சனங்களும் கருத்துகளும் வருவது இயல்புதான். ஆனால், விமர்சனம் செய்வதற்கும் எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஒருவரைப் பற்றி தவறான கதைகளை உருவாக்கிப் பரப்புவதற்கும் வித்தியாசம் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

மது பழக்கம் குறித்து தவறான தகவல்களா?

ஐஸ்வர்யா குறித்து மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர் என்பது போன்ற கருத்துகளைப் பரப்புவது மிகவும் பொறுப்பற்ற செயல் என்றும் அர்ஜுன் சுட்டிக்காட்டியுள்ளார். எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஒரு பெண்ணின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்துகளைப் பதிவிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

தங்களது குடும்பம் இதுவரை அமைதியாக இருந்ததை, இதுபோன்ற குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதாக யாரும் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார். அதேபோல், தங்களது மௌனத்தைப் பயன்படுத்தி தவறான தகவல்களைத் தொடர்ந்து பரப்புவதற்கும் அனுமதிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தனது மகளைப் பற்றி அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் அர்ஜுன் புகார் அளித்துள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சியிலும் இறங்கியுள்ளதாகத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், செய்திகளை வெளியிடும் ஊடகங்களையும் பத்திரிகைத் துறையையும் தான் மதிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அர்ஜுன், அதே நேரத்தில் உண்மைத் தன்மையைச் சரிபார்க்காமல் சில ஊடகங்கள் பரபரப்புக்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

“எந்தப் பெண்ணும் தனது வாழ்க்கையை நியாயப்படுத்த வேண்டியதில்லை!”

தனது மகளுக்கு ஒரு தந்தையாக எப்போதும் துணையாக இருப்பேன் என்று உறுதியாகத் தெரிவித்துள்ள அர்ஜுன், ஒவ்வொரு பெண்ணுக்கும் கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் சுதந்திரமாக வாழ உரிமை உள்ளது என்பதை வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் தனிப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு இதுபோன்ற அவதூறுகள் மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார். எந்தப் பெண்ணும் தனது வாழ்க்கையைத் தனக்குப் பிடித்தபடி வாழ்வதற்காக மற்றவர்களிடம் தன்னை நியாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற ஆதாரமற்ற தகவல்கள் பரப்பப்பட்டாலோ, ஏற்கெனவே பரப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் மீண்டும் பெரிதுபடுத்தப்பட்டாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை தொடரும் என்றும் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், மகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அர்ஜுன் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. ஒரு தந்தையாக மகளின் உரிமையையும் கண்ணியத்தையும் பாதுகாக்க அவர் எடுத்துள்ள இந்த நிலைப்பாட்டிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.