ஒரே கருவறையில் சிவன் – முருகன்! திருவிடைக்கழி கோயிலின் அரிய சிறப்புகள்!

ஒரே கருவறையில் சிவன் – முருகன்! திருவிடைக்கழி கோயிலின் அரிய சிறப்புகள்!

முருகப்பெருமானின் அபய ஹஸ்த தரிசனம், சிவபெருமானுடன் ஒரே கருவறையில் அருள்பாலிக்கும் சிறப்பு, சக்திவாய்ந்த குரா மரம் எனப் பல ஆன்மிக அதிசயங்களைக் கொண்ட திருவிடைக்கழி திருக்கோயிலின் மகிமையையும், அருணகிரிநாதர் பாடிய திருப்புகழின் சிறப்பையும் தெரிந்துகொள்வோம்.

Author: Bhavani ஆன்மிகம்

முருகப்பெருமானை நினைத்து நாம் பாடும் ஒவ்வொரு திருப்புகழும் வெறும் பாடல் அல்ல; அது நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஓர் இடத்தில் ஏற்பட வேண்டிய திருப்பத்தையும், மனத் தெளிவையும் வேண்டுகின்ற ஆன்மிகப்பிரார்த்தனையாகும்.

'திருப்பம் தரும் திருப்புகழ்' தொடரில் ஒவ்வொரு கோயிலாகப் பார்த்து வரும் நாம், 38ஆவது பகுதியில் சிந்திக்கும் புனிதத் திருத்தலம், திருவிடைக்கழி. மயிலாடுதுறைக்கு அருகில், அபிராமி அம்மை வீற்றிருந்தருளும் திருக்கடையூருக்கு மிக அருகில் அமைந்துள்ள அற்புதமான தலம் இது. இத்தலத்தில் முருகப்பெருமான் திருக்குரா மரத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். மேலும், ஒரே கருவறையில் முருகப்பெருமானும், லிங்கத் திருமேனியராக சிவபெருமானும் அருள்செய்வது இத்தலத்தின் மிகச் சிறப்பான அம்சமாகும்.

கலியுகத்தில் நாம் ஏன் பிறந்தோம் எதற்காக இந்தத் துன்பத்தை அனுபவிக்கிறோம் என்ற அத்தனை கேள்விகளுக்கும் விடையாகவும், அந்தத் துன்பங்கள் கழிந்து நாம் வாழ்க்கையில் இன்பம் பெறவும் அருளக் கூடிய ஆற்றல் நிறைந்த கோயிலாகத் திருவிடைக்கழி திகழ்கிறது.

இந்தத் தொடரில் இதற்கு முன்பு பார்த்த திருச்செங்கோடு கோயிலைப் போலவே, இப்போது பார்க்கின்ற திருவிடைக்கழி கோயிலும் நான்கு யுகங்களுடன் தொடர்பு உடைய கோயில் கந்தபுராணம் மட்டுமன்றி மற்ற எல்லா புராணங்களோடும் கூட தொடர்புடையது, திருவிடைக்கழி திருக்கோயில் முருகன் முதலடி வைத்த தலம். அதாவது, கலியுகத்தில் முருகர் பாதம் பட்ட இடங்கள் எத்தனையோ அற்புதமான திருக்கோயில்கள் இருந்தாலும் பூவுலகில் அவரது புனிதத் திருப்பாதம் முதன்முதலில் பட்ட இடம் திருச்செந்தூர், பழனி, அந்த வரிசையில் திருவிடைக்கழியும் இடம்பெற்றிருக்கிறது.

கலியுகம் தோன்றிய பிறகு இன்று நாம் வாழும் சமகாலத்தில் முருகப்பெருமான், கோயில்கொண்டு அடியவர்களுக்கு அபயம் அளித்திடும் தலங்கள் அநேகம் உண்டு. ஆனால், முருகப் பெருமான். தானே அனைவர்க்கும் அபயம் அளிப்பவன் என்பதனை உணர்த்தும் விதமாக, அபய ஹஸ்தத்துடன் காட்சியருளும் விசேஷத் தலம் இதுதான். அத்தகைய முதன்மைக் கோலத்துடன் முருகன் காட்சியளிக்கும் தலமும் இந்தத் திருஇடைக்கழிதான். அண்டியவரைக் காத்திடும் அனுகிரஹ மூர்த்தியாக அருளும் திரு இடைக்கழி முருகனைப் போற்றி, அருணகிரிநாத பெருமான் அருளிய திருப்புகழ் இது.

சந்தம்:

தனதனனத் தனதான தனதனனத் தனதான தனதனனத் தனதான தனதான -

பாடல்:

பழியுறுசட் டகமான குடிலையெடுத் திழிவான

பகரும்வினைச் செயல்மாதர் தருமாயப்

படுகுழிபுக் கினிதேறும் வழிதடவித் தெரியாது பழமைபிதற் றிடுலோக முழுமூடர் ஒருபயனைத் தெளியாது விளியாமுன் உனகமலப் பதநாடி யுருகியுளத் தமுதூற

உழலும்விருப் புடனோது பலசவலைக் கலைதேடி

உனதுதிருப் புகழோத அருள்வாயே

தெழியுவரிச் சலராசி மொகுமொகெனப் பெருமேரு

திடுதிடெனப் பலபூதர் விதமாகத்

திமிதிமெனப் பொருசூர னெறுநெறெனப்

பலதேவர் ஜெயஜெயெனக் கொதிவேலை விடுவோனே

அழகுதரித் திடுநீப சரவணவுற் பவவேல

அடல்தருகெற் சிதநீல மயில்வீரா அருணைதிருத் தணிநாக மலைபழநிப் பதிகோடை

அதிபஇடைக் கழிமேவு பெருமாளே.

இடைக்கழி திருக்கோயில் ஆன்மிகத் தத்துவமும் சிறப்புகளும் நிறைந்தது:

சிவசக்தி ஐக்கியம் இங்கே உணர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், இங்கே சிவனுடன் சக்தியாக முருகப்பெருமான் இணைந்து திகழ்கிறார். அதாவது சிவனும் முருகனும் வேறு வேறு அல்லர், ஒருவரேதான் என்ற தத்துவத்தினை உணர்த்தும் கோயில் இது. சூரசம்ஹாரம் நடந்து முடிந்த பின்னர், தேவர்கோன், தன் மகள் தெய்வானையை முருகப்பெருமானுக்குச் சமர்ப்பித்த திருத்தலம். இங்குள்ள தெய்வானை, முருகப்பெருமானை பார்த்தவாறே இருப்பார்.

இத்திருக்கோயிலில் உள்ள குரா மரம் மிகவும் சக்தி வாய்ந்த முருக மரமாகச் சொல்லப்படுகிறது. முருகப்பெருமான் இந்தக் குரா மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இன்றும் பல்வேறு ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் அரூபமாகவும். உருவமாகவும் வந்து இந்த முருகப்பெருமானையும் சிவபெருமானையும் வணங்குகின்றனர் என்பது ஐதிகம்.

இந்தத் திருத்தலத்தில் உள்ள குரா மரத்தின் பெயரில் உள்ள எழுத்துகளைத் திருப்பிப் போட்டால் ராகு என்று வரும். ஜாதகத்தில் உள்ள சர்ப்ப தோஷம் என்கிற ராகு தோஷத்தினால் நீண்ட நாட்களாகத் திருமணம் ஆகாதவர்கள், கடும் துயரத்தை, துன்பத்தைச் சந்தித்து வருகிறவர்கள், மேலும் குடும்ப சம்பந்தமான பிரச்னை இருக்கிறவர்கள், கலியுகத்தில் எது செய்தாலும் தோல்வியிலே போய் முடிகிறது என்று விரக்தியுடன் இருப்பவர்கள் என அனைவருமே இந்த குரா மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்து, முருகனை வேண்டினால், விரைவில் அந்த வினை மாறி, நல்லவை கைகூடும் என்பது எனது முருக ஆராய்ச்சியில் வந்த விஷயம் இக்கோயிலில் இறைவன் அருளும் கருவறையைச் சுற்றி மூன்று லிங்கங்கள் உள்ளன:

ஸ்படிக லிங்கம், பாபநாச லிங்கம், வசிஷ்ட லிங்கம். இப்படி ஓர் அமைப்பில் மூன்று லிங்கங்கள் கருவறையைச் சுற்றி இருப்பது வேறு எங்கும் இல்லாத அமைப்பு என்கிறார்கள்.

வில்லேந்திய முருகன் இத்தலத்தின் மற்றொரு சிறப்பு. எப்போதும் வேலேந்தும் முருகப் பெருமான், இந்தத் தலத்தில் வில்லேந்தியதாகச் சொல்லப்படுகிறது. அதாவது இப்பகுதியிலும் சுற்றுவட்டாரத்திலும் அசுரர்களுடன் நடந்த போரின்போது, முருகப் பெருமான் வில்லேந்திப் போரிட்டதாகவும் கூறப்படுகிறது. தினமும் காலையும் மாலையும் கந்தனின் திருநாமங்களைச் சிந்திப்போம். அவனுடைய வெற்றிவேலையும், நீல மயிலையும், சேவற்கொடியையும் மனக்கண் முன் நிறுத்தி, "எங்கள் வாழ்வில் தடைகளை நீக்கி, மனதில் உன் நினைவே நிலைத்திடவும், உன் தாமரைத் திருவடிகளில் நிலையாக பக்திகொள்ளவும் வரம் தந்தருள்வாய் என்று பிரார்த்திப்போம்.

வாழ்க்கையில் சோதனைகளும் தடைகளும் வரும்போதெல்லாம், திருவிடைக்கழி (திரு இடைக்கழி) வேலவனின் திருப்புகழைப் பாடி மனத் தெளிவையும், வெற்றியையும் அடைவோமாக!

அருணகிரிநாதர் அருளிய மற்றொரு அற்புதமான திருப்புகழோடும் அது சொல்லும் கோயில் பெருமைகளோடும் அடுத்த பகுதியில் சந்திப்போம்.

(திருப்புகழ் மணக்கும்)