சென்னை: மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனையடுத்து ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வு அமைத்தது கேரள உயர்நீதிமன்றம். இதில், நீதிபதிகள் ஏ.கே. ஜெயசங்கரன், நம்பியார், சி.எஸ்.சுதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நடிகர்கள் முகேஷ், சித்திக், எடவேள பாபு இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் மீதும் போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே பாலியல் புகாருக்கு உள்ளான நடிகரும் எம்.எல்.ஏவுமான முகேஷுக்கு முன் ஜாமின் வழங்கி எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் பிரபல மலையாள நடிகை செளமியா, தமிழ் இயக்குநர் ஒருவர் மீது வைத்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 18 வயதில் சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தருவதாகக் கூறி, பிரபல இயக்குநர் ஒருவர் தன்னை செக்ஸ் அடிமையாக வைத்திருந்ததாக நடிகை செளமியா தெரிவித்துள்ளார். தமிழ், மலையாளம் மொழி படங்களில் நடித்துள்ள செளமியா, தனக்கு 18 வயதில் நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து மனம் திறந்துள்ளார். அதாவது செளமியாக கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் போது, பிரபல தமிழ் இயக்குநர் ஒருவர் சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தருவதாகக் கூறியுள்ளார்.
அப்போது சினிமா, நடிப்பு பற்றியெல்லாம் செளமியாவின் பெற்றோருக்கு தெரியவில்லை. அதேநேரம் சினிமாவில் நடித்தால் பணம் கிடைக்கும் என்பதால், அந்த இயக்குநருடன் செளமியாவை அனுப்பி வைத்துள்ளனர். அதனையடுத்து செளமியாவை இயக்குநரும் அவரது மனைவியும் சேர்ந்து அவர்களது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பின்னர் செளமியாவுக்கு ஸ்க்ரீன் டெஸ்ட்டும் எடுத்துள்ளனர். இதனால் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிவிடலாம் என நினைத்த செளமியாவுக்கு, பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
அதாவது, மெல்ல மெல்ல செளமியாவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள இயக்குநர், அவரது மனைவி வீட்டில் இல்லாத போது முத்தமிடத் தொடங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியான செளமியாவை மிரட்டிய அந்த இயக்குநர், அதன் பின்னரும் தொடர்ந்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தாராம். தொடர்ச்சியாக பலமுறை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ள அந்த இயக்குநர், நடிகை செளமியாவை ஒரு செக்ஸ் அடிமை போலவும் பயன்படுத்தியுள்ளார். ஒருகட்டத்தில் செளமியாவுடன் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுவதாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதனால் மொத்தமாக குழம்பி போன நடிகை செளமியா, இந்த பாதிப்பில் இருந்து வெளியே வர 30 வருடங்கள் ஆகிவிட்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் இதுபற்றி போலீஸாரிடம் புகார் கொடுத்தால், அந்த இயக்குநரால் தனக்கு எதும் அசம்பாவிதம் நடக்கும் என்ற பயத்தில் அப்படியே அமைதியாக இருந்துவிட்டதாகவும் தற்போது தெரிவித்துள்ளார். நடிகை செளமியாவின் இந்த குற்றச்சாட்டு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, யார் அந்த இயக்குநர் என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளது. அதேநேரம் தற்போது அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவினரிடம் அந்த இயக்குநர் குறித்து முழுமையாக புகார் அளிக்க உள்ளாராம் செளமியா.
மேலும் படிக்க - விஜய்யின் கோட் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்!
நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படும் சம்பவங்களில், அடுத்தடுத்து பல அதிர்ச்சியான செய்திகள் வெளியாகி ரசிகர்களை உறைய வைத்துள்ளது. மல்லுவுட்டை அதிர வைத்துள்ள ஹேமா கமிட்டி அறிக்கை, கோலிவுட், டோலிவுட், பாலிவுட் உட்பட கன்னட திரையுலகிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.