சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக பிரம்மாண்டமான படங்களை தயாரிப்பதில் லைகா நிறுவனம் தான் முதலிடத்தில் உள்ளது. விஜய்யின் கத்தி திரைப்படம் மூலம் கோலிவுட்டில் தடம் பதித்த லைகா, தற்போது டோலிவுட், பாலிவுட் படங்களையும் தயாரித்து வருகிறது. கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, 2.O, பொன்னியின் செல்வன், லால் சலாம், இந்தியன் 2 ஆகிய படங்கள் லைகாவின் பிரம்மாண்டமான தயாரிப்பில் வெளியானவை. தற்போது ரஜினியின் வேட்டையன், அஜித்தின் விடாமுயற்சி, மோகன்லாலின் எல்2 எம்புரான் ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.
ஆரம்பத்தில் லைகா தயாரித்த படங்களில் வசூலில் சக்கைப்போடு போட்டன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே லைகா தயாரிப்பில் வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. பொன்னியின் செல்வன் முதல் பாகம் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக சொல்லப்பட்ட நிலையில், இரண்டாம் பாகத்துக்கு வரவேற்பு இல்லாமல் போனது. அதேபோல், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2, லால் சலாம், இந்தியன் 2 படங்கள் சுத்தமாக எடுபடவே இல்லை. இதனால் லைகா நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருகட்டத்தில் அஜித்தின் விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனம் ட்ராப் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. அதேபோல், வேட்டையன் படத்தின் ரிலீஸிலும் சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்பட்டது. இது எல்லாம் வதந்தி என்பதை அடுத்தடுத்து அப்டேட்கள் கொடுத்து தீர்த்து வைத்தது லைகா புரொடக்ஷன்ஸ். இந்நிலையில், லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், தங்களது நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, படங்களில் நடிக்க நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடைபெறுவதாக விளம்பரங்கள் வெளியாகின்றன.
இதுபோன்ற போலியான் விளம்பரங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். லைகா தயாரிக்கும் படங்களில் நடிக்க நடிகர்கள் தேவை என நாங்கள் விளம்பரங்கள் செய்யவில்லை. அப்படியே விளம்பரங்கள் வெளியானாலும், அது லைகாவின் சமூகவலைத்தளங்களில் மட்டுமே அறிவிக்கப்படும். எனவே லைகா பெயரில் வெளியாகும் காஸ்டிங் கால்கள், ஆடிஷன்களை புறக்கணித்துவிடுங்கள் என அலர்ட் செய்துள்ளது. மேலும் லைகா பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் நபர்கள் அல்லது ஏஜென்ஸிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
மேலும் படிக்க - விரைவில் நாக சைதன்யா - சோபிதா துலிபலா திருமணம்!
முன்னதாக ரஜினியின் லால் சலாம் படத்தில் நடிக்க, காஸ்டிங் கால் அழைப்பு விடுத்திருந்தது லைகா நிறுவனம். ஆனால் அதன்பின்னர் லைகா பேனரின் பெயரில் வெளியான காஸ்டிங் கால் விளம்பரங்கள் போலி என சொல்லப்படுகிறது.