சினிமா

IMAX திரையில் மோகன்லால்..புதிய அத்தியாயத்தை தொடங்கும் மலையாள சினிமா

IMAX திரையில் வெளியாகவுள்ள முதல் மலையாள திரைப்படம் என்கிற வரலாற்றை படைக்க உள்ளது பிருத்விராஜ் சுகுமாரனின் L2E:எம்பூரான் (லூசிஃபர் இரண்டாம் பாகம்)

IMAX திரையில் மோகன்லால்..புதிய அத்தியாயத்தை தொடங்கும் மலையாள சினிமா
IMAX திரையில் மோகன்லால்

பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஆன லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமான L2E:எம்பூரான் வருகிற மார்ச் 27, 2025 அன்று உலகளவில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியிட தயாராகி வருகிறது. L2E:எம்பூரான் திரைப்படம் மூலம் மலையாள சினிமா ஒரு புதிய அத்தியாத்தை தொடங்க உள்ளது. அது என்னவென்றால், மலையாள படம் ஒன்று முதன் முறையாக IMAX திரையில் வெளியாகவுள்ளது.

இதுக்குறித்த அறிவிப்பை தனது X வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் நடிகர் மோகன்லால். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மலையாள சினிமா துறையில் இருந்து IMAX-ல் வெளியாகும் முதல் படம் L2E எம்பூரான் என்பதை அறிவிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இது IMAX மற்றும் மலையாள சினிமா இடையேயான நீண்ட மற்றும் புகழ்பெற்ற இணைப்பின் தொடக்கமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். 27/03/2025 முதல் உலகம் முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட IMAX திரைகளில் படம் வெளியாக உள்ளது. அதற்கு உங்கள் ஆதரவினைத் தாருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

L2E: எம்பூரான் 1:2.8 விகிதத்துடன் அனமார்ஃபிக் வடிவத்தில் (anamorphic format) படமாக்கப்பட்டுள்ளது. IMAX திரையில், மோகன்லாலை குரேஷி-அப்ராம் அல்லது ஸ்டீபன் நெடும்பள்ளியாகப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் சர்ப்பரைஸ் ட்ரீட் என்றே சொல்லலாம்.

L2E படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கி நடித்துள்ளார். மேலும், டோவினோ தாமஸ், சூரஜ் வெஞ்சரமூடு, மஞ்சு வாரியர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கேம் ஆஃப் த்ரோன்ஸ் புகழ் ஜெரோம் ஃப்ளின், இந்த படத்தின் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமாகிறார். லைகா சுபாஸ்கரன், ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.