அரசியல்

Lipstick Issue : கொசுக்கடி முக்கியமா? இல்லை லிப்ஸ்டிக் பிரச்சனை முக்கியமா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்!

Jayakumar About Lipstick Issue : கமிஷன் பிரச்சனையும், லிப்ஸ்டிக் பிரச்சனையும் நடந்து கொண்டிருக்கும் சென்னை மாநகராட்சியில் கொசுத் தொல்லை, மழைநீர் தேக்கம் என சென்னையில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை மேயரும், துணைமேயரும் கண்டு கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

Lipstick Issue : கொசுக்கடி முக்கியமா? இல்லை லிப்ஸ்டிக் பிரச்சனை முக்கியமா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்!
கொசுக்கடி முக்கியமா? இல்லை லிப்ஸ்டிக் பிரச்சனை முக்கியமா?

Jayakumar About Lipstick Issue : சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “சட்டமன்றம் என்பது ஜனநாயகத்தில் நான்கு தூண்களில் முக்கியமான ஒன்று. ஆனால் இன்றைக்கு சட்டப்பேரவை தலைவராக இருக்கிற அப்பாவு பேரவை தலைவருடைய கண்ணியத்தையே நிலை குலைய வைத்து இருக்கிறார். பேரவைக்கு என்று மாண்புகள் இருக்கிறது. அந்த மாண்புகளை காற்றில் பறக்கவிட்டு அரசியல்வாதிகள் போல கருத்துகளை சொல்லி இன்று நீதிமன்ற படுக்கட்டிகளில் பேரவை தலைவர் ஏறிக் கொண்டிருக்கிறார்.

கோர்ட்டில் ஆஜராகதான் வேண்டும் என்ற வகையில் இதுவரை இல்லாத அளவுக்கு சபாநாயகரே நீதிமன்றம் அணுகுகிறார் என்ற நிலைக்கு இன்றைக்கு தற்போதைய சபாநாயகர் உள்ளாகிவிட்டார் என்று நினைக்கும்போது அந்த பேரவை தலைவருடைய மாண்பையே குலைத்து கண்ணியத்தை குலைத்த பெருமைக்குரியவர் ஆக அப்பாவு இன்று இருக்கிறார். நாங்கள் சட்டப்பேரவையில் அரசியல் பேசியது கிடையாது. சட்டப்பேரவையில் அரசியல் பேசிய ஒரு கழகத்தை வம்புக்கு இழுத்து அதன் மூலம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை இழிவு படுத்துகிற வகையில் பேசியது இன்று நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏற வைத்து இருக்கிறது. 

சென்னை மாநகரத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது. சாலைகள் குண்டும்  குழியுமாய் இருக்கின்றன. ஒரு புறம் மழை நீர் தேங்கி இருக்கிறது, வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை, சாலைகளில் பல விபத்துகள் நடைபெறுகின்றன. இதை எல்லாம் சென்னை மாநகராட்சி நிர்வாகமும் மேயரும் துணை மேயரும் கண்டு கொள்வதில்லை. சென்னை மாநகராட்சி சீரழிந்தால் என்ன என்று இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 13,000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கொசுத்தொல்லை அதிகமாக இருக்கிறது. கொசுவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் இன்றைக்கு மாநகராட்சியில் ஈகோ பிரச்சனை எழுந்திருக்கிறது. மேயருக்கும், துணை மேயருக்கும் கமிஷன் வாங்குவதில் ஈகோ பிரச்சனை எழுந்திருக்கிறது. ஒருவரை ஒருவர் முதுகில் குத்தும் வகையில் மாநகராட்சியே ஸ்தம்பித்து இருக்கிறது. 

இதில் மாநகராட்சியில் லிப்ஸ்டிக் பிரச்சனை வேறு எழுந்திருக்கிறது. நீ எனக்கு நிகரா என்கின்ற அளவுக்கு இன்றைக்கு லிப்ஸ்டிக் கூட பூசக் கூடாது என்று சொல்லி தடை போட்டு தபேதாரை மாற்றி பிரச்சனை செய்யும் மேயர், அடிப்படைப் பிரச்சனையில் கவனம் செலுத்தவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: நாட்டின் முதல் கிளேட் 1B தொற்று கண்டுபிடிப்பு... அவசரநிலை அறிவிக்க முடிவு!

இதனையடுத்து ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு, “அரைத்த மாவை அரைக்க வேண்டாம். அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் முகத்திலேயே முழிக்க கூடாது” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.