Vinesh Phogat: “வினேஷ் போகத் தகுதி நீக்கம் பின்னணியில் சதி..” பகீர் கிளப்பிய விஜேந்தர் சிங்!

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னணியில், சதி இருப்பதாக குத்துச் சண்டை வீரர் விஜேந்திர சிங் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Aug 7, 2024 - 17:38
 0
Vinesh Phogat: “வினேஷ் போகத் தகுதி நீக்கம் பின்னணியில் சதி..” பகீர் கிளப்பிய விஜேந்தர் சிங்!
வினேஷ் போகத் - விஜேந்தர் சிங்

சென்னை: பரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையாகியுள்ளது. மல்யுத்த போட்டிகளில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக விளையாடி அரையிறுதிப் போட்டியிலும் வெற்றிப் பெற்றிருந்தார் வினேஷ் போகத். இதனைத் தொடர்ந்து இன்றிரவு நடைபெறவிருந்த இறுதிப் போட்டியில் வினேஷ் போகத் விளையாடுவார், அதோடு கண்டிப்பாக தங்கம் வெல்வார் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், 50 கிலே எடை பிரிவில் பங்கேற்ற வினேஷ் போகத், 100 கிராம் எடை அதிகம் உள்ளதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் குழுவின் தலைமை மருத்துவர் தின்ஷா பெள்டிவாலா விளக்கம் கொடுத்திருந்தார். அதில், வினேஷ் போகத் நேற்று தொடர்ச்சியாக 3 போட்டிகளில் விளையாடி இருந்தார். சில நேரங்களில் தொடர்ந்து விளையாடுவதால் எடை கூடும். அரையிறுதிப் போட்டி முடிந்த பின்னர் வினேஷ் போகத்தின் எடையை பரிசோதித்தோம். இதனால் இரவு முழுவதும் எடையை குறைக்கும் பயிற்சியை அவர் தீவிரமாக மேற்கொண்டார். இருப்பினும் 100 கிராம் எடை அதிகமாக இருந்தது. இதனையடுத்து வினேஷ் போகத்தின் உடையின் அளவை குறைத்தோம், அவரது முடியை வெட்டினோம். ஆனாலும் கூட 50 கிலோவுக்கு எடையை கொண்டு வர முடியவில்லை எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு பின்னணியில் சதி இருப்பதாக, இந்திய குத்துச் சண்டை வீரர் விஜேந்திர சிங் குற்றம்சாட்டியுள்ளார். இந்திய வீரர்கள் மல்யுத்தத்தில் வெற்றிப் பெறக் கூடாது என்பதை தடுப்பதற்காகவே இப்படியொரு சதி செய்யப்பட்டுள்ளது. வினேஷ் போகத்தின் வெற்றியை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. எங்களை போன்ற வீரர்களுக்கு ஒரே இரவில் 5 கிலோ வரை எடை குறைக்க முடியும். அப்படி இருக்கும் போது 100 கிராம் எடை குறைப்பதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. 

இந்த விவகாரத்தில் யாரோ சிலரின் தலையீடு உள்ளது. அவர்கள் தான் வினேஷ் போகத்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என முயற்சி செய்துள்ளனர். ஒலிம்பிக் சம்மேளனம் வினேஷ் போகத்துக்கு நேரம் கொடுத்திருக்க வேண்டும், அவர் 100 எடையை குறைக்க வாய்ப்பு கொடுத்திருக்கலாம். ஒலிம்பிக்கில் பல போட்டிகளில் பங்கேற்றுள்ள நான், இப்படியொரு சம்பவத்தை நான் இதற்கு முன் பார்த்தது கிடையாது எனக் கூறியுள்ளார். அதேபோல், எங்களுக்கு சரியான ஓய்வு கொடுத்தாலே போதும், நாட்டுக்காக பசியை கூட பொறுத்துக்கொண்டு அடுத்தப் போட்டிக்காக என்ன செய்ய வேண்டுமோ அதில் கவனம் செலுத்துவோம் எனவும் விஜேந்திர சிங் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா விளையாட்டில் சாதிப்பதை பிடிக்காதவர்கள் செய்த சதியாக இதனை பார்க்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார். 

2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில், இந்திய அணிக்காக குத்துச் சண்டைப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று வந்தவர் விஜேந்திர சிங். ஒலிம்பிக் குத்துச் சண்டை பிரிவில் முதல் பதக்கம் வென்ற இந்திய வீரர் விஜேந்திர சிங் என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஜுனா, பத்மஸ்ரீ உட்பட பல முக்கியமான விருதுகளை வென்றுள்ள விஜேந்திர சிங், தற்போது பாஜகவில் ஐக்கியமாகியுள்ளார். முன்னதாக டெல்லியில் பாஜகவுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம், குத்துச் சண்டை வீராங்கனைகளின் போராட்டம் ஆகியவைகளுக்கு விஜேந்திர சிங் ஆதரவு கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க - வினேஷ் போகத்திற்கு இந்தியா முழுவதும் ஆதரவு குரல் 

இதனிடையே, வினேஷ் போகத்தை அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு நான் தயார் செய்வேன் என, அவரது பெரியப்பாவும் துரோணாச்சாரியா விருது வென்ற மல்யுத்த பயிற்சியாளருமான மகாவீர் சிங் போகத் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள் நம்பிக்கையிழக்க வேண்டாம் எனவும், ஒருநாள் வினேஷ் போகத் நாட்டுக்காக நிச்சயம் பதக்கம் வெல்வார் எனக் கூறியுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow