தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு...!
சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளை சூழ்ந்த வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே மழைநீர் சாக்கடை நீருடன் கலந்து குளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.
Read More: IQAir-ன் உலக காற்று தர அறிக்கை.. இந்தியாவிற்கு 5-வது இடம்...!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதியில் காலை முதலே கனமழை கொட்டி தீர்த்தது. அதேபோல திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. கோயிலில் மாசி திருவிழா நடைபெற்று வரும் நிலையில் கோயிலுக்கு வந்த பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
கோவை மாவட்டத்திலும் பிற்பகலுக்கு மேல் பரவலாக மழை கொட்டி தீர்த்தது. மாநகர் பகுதிகளான காந்திபுரம், சிவானந்தா காலனி, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் பெய்த கனமழையால் பேருந்து நிலையத்தில் சாக்கடை கலந்த மழைநீர் சூழ்ந்து குளம் தேங்கியது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் பேருந்து நிலையம் முழுவதும் சாக்கடை நீருடன் கலந்த மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் கழிவுநீரில் நடந்து செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.
Read More: பாகிஸ்தானில் சுமார் 100 பேருடன் பயணிகள் ரயில் கடத்தல்.. 11 வீரர்கள் உயிரிழப்பு
ஈரோட்டில் பெய்த மழையால் சாலைகளில் சாக்கடை நீருடன் கலந்த மழைநீர் வெளியேறியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கருங்கல்பாளையம் அருகே காவிரி ரோட்டில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலையில் வெளியேறியதால், வாகன ஓட்டிகளும், நடந்து சென்ற பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
What's Your Reaction?






