சொத்து வரி கட்டாத கடைகளுக்கு குப்பைத் தொட்டியால் நெருக்கடி- மழுப்பும் மாநகராட்சி!
மதுரை மாநகராட்சியில் சொத்துவரியினை நீண்ட காலம் பாக்கி வைத்துள்ள வணிக கட்டிடங்கள், வீடுகள் முன்பு குப்பை தொட்டியினை வைத்து கட்டிட உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கையை மாநகராட்சி ஊழியர்கள் தொடங்கியிருக்கிறார்கள்.

மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சொத்து வரி மூலம் ஆண்டிற்கு மாநகராட்சிக்கு ரூ.247 கோடி வருவாய் கிடைக்கிறது. கடந்த அரையாண்டு வரை ஓரளவு சொத்து வரி தீவிரமாக வசூல் செய்யப்பட்டதால் தமிழக அளவில் சொத்து வரி வசூலில், மதுரை மாநகராட்சி 98% உடன் மூன்றாம் இடம்பிடித்தது.
மத்திய அரசு மானியம் கிடைக்க வேண்டுமென்றால், மாநகராட்சி கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 15 சதவீதம் சொத்து வரி அதிக அளவு வசூல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை மதுரை மாநகராட்சி மத்திய அரசு நிர்ணயித்துள்ள சொத்துவரி வசூல் இலக்கை எட்டாததால் ஆணையாளர் சித்ரா உத்தரவின்பேரில், 100 வார்டுகளிலும் சொத்து வரி வசூல் செய்வதற்கு தற்போது கிளர்க்குகள், பில்கலெக்டர்கள், சூப்பரெண்டுகள், வருவாய் பிரிவு உதவி அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருமே வரிவசூலில் களமிறக்கி விடப்பட்டுள்ளனர்.
கட்டிடங்கள் முன்பு குப்பைத் தொட்டிகள்:
மண்டலம் வாரியாக ரூ.1 லட்சத்திற்கு மேல் அதிகம் சொத்துவரி பாக்கி வைத்துள்ள முதல் 50 முதல் 100 கட்டிட உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பவது, நேரடியாக மாநாராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகள் வீடு தேடி சென்று சொத்து வரி கட்ட எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி அறிவுறுத்தும் பணியும் நடக்கிறது. அதையும் மீறி கட்டாத கட்டிட உரிமையாளர்களை சொத்து வரி கட்ட வைப்பதற்கு, அவர்கள் கட்டிடங்கள் முன் குப்பை தொட்டிகளை வைக்கும் நடவடிக்கையை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
ஒவ்வொரு வார்டுகளிலும் பில் கலெக்டர்கள் சொத்து வரி பாக்கி பட்டியலை கையில் எடுத்துக் கொண்டு அதிகாரிகள் மேற்பார்வையில் லாரிகளில் கொண்டு வரப்படும் குப்பைத் தொட்டிகளை, சொத்து வரி கட்டாமல் தாமதப்படுத்தும் கட்டிடங்கள் முன் இறக்கி வைத்து செல்கிறார்கள்.
மதுரை கே.கே நகர் பகுதியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அலுவலகம் நடத்தி வருகிறார். இந்த கட்டிடத்தின் உரிமையாளர் தர்ம சிங் ராஜா ஒரு லட்சம் மேல் சொத்துவரி பாக்கி வைத்துள்ளதாக தெரிய வருகிறது. இதன் காரணமாக ஆர்.பி.உதயகுமார் அலுவலகத்தின் முன்பே இரண்டு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மாநகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்கும் போது, “சொத்து வரி கட்டத் தவறியவர்கள் கட்டி வருகிறார்கள். பெரும்பாலனோரிடம் வரியும் வசூல் செய்து விட்டோம். ஒரு சில பேரிடம் வரி வசூல் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். வரி கட்டாத வீட்டின் முன்பு இதுபோன்ற குப்பைத் தொட்டி வைக்கும் நடைமுறை நாங்கள் பின்பற்றுவது கிடையாது.. எதற்காக வைக்கப்பட்டது? என்பது குறித்து விசாரித்து தான் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
Read more: குளிக்க சென்ற பெண்ணை துரத்திய கரடி- திணறும் வனத்துறை அதிகாரிகள்!
What's Your Reaction?






