கோவை காட்டூர் பகுதியில் உள்ள தேசிய பஞ்சாலை கழக அலுவலகத்தை 5 மாதமாக சம்பளமாக கொடுக்கவில்லை எனவும், அரியர் தொகையும் வழங்கவில்லை எனக் கூறியும், மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான ஆலைகள் 2020 முதல் இயக்கப்படவில்லை எனவும், தொழிலாளர்களுக்கு பாதி சம்பளம் மட்டும் வழங்கி வந்த நிலையில், தற்போது அந்த ஊதியமும் வழங்கவில்லை எனக் கூறி தொழிலாளர்கள குடும்பத்துடன் கையில் பூட்டுடன் தேசிய பஞ்சாலை கழக அலுவலக வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எல்.பி.எப் தொழிற் சங்கத்தின் பொதுச் செயலாளர் பார்த்தசாரதி கூறும் போது, தொழிலாளர்களுடைய, வாழ்வாதாரத்திற்காக தான், தி.மு.க தொழிற் சங்கம் இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கிறது. மோடி போன்றோர், அண்ணாமலை போன்றோரை தவறான பிரச்சாரத்தில் ஈடுபடுத்துகிறார்கள். அதற்காக நாங்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை.
மோடி அரசால் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடிய ஐந்து மாத சம்பள பாக்கி, 200 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என்பது தான் எங்கள் போராட்டத்தின் நோக்கம். எனவே வேலைக்கு வருகிற தொழிலாளிக்கு ஒரு ஐந்து மாதமாக சம்பளம் வழங்கவில்லை என்றால், அவர்கள் வேலைக்கு எப்படி வருவார்கள், குடும்பம் குழந்தைகளை எப்படி கவனிக்க முடியும் ?. அதனால் மட்டும் தான் இந்த போராட்டத்தை முன்னெடுத்து இருக்கிறோம் என்றனர்.
மேலும் சவுத் ரீஜியனில் கிட்டத்தட்ட 2000 தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கிட்டத் தட்ட ஐந்து மாதமாக அவர்களுக்கு வர வேண்டிய சம்பள பாக்கி 200 கோடி ரூபாயை விடுவிக்க வேண்டும். கிட்டத்தட்ட என்.டி.சி யின் சொத்து ஒரு லட்சம் கோடி இருக்கிறது. இதை தர மறுப்பதால் தான் போராட்டம் நடத்தப்படுகிறது.
வேலை பார்த்த சம்பளத்திற்காக உரிமைக்காக போராடிக் கொண்டு இருக்கிறோம். அவர்கள் ஒத்துக் கொண்டதன் படி, 15 தினங்களுக்குள் சம்பள பாக்கியத்தை வழங்கவில்லை என்றால், இந்த அலுவலகத்தில் அமர்ந்து வீடு திரும்ப போராட்டம் முன்னெடுக்கப்படும். அதுவும் குழந்தை குட்டிகள் குடும்பமாக வந்து அமருவதை தவிர வேறு வழியில்லை என்றார்.
ஒரு மாதத்திற்கு இந்தியா முழுவதும், 20 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. 5 மாதங்கள் சம்பளம் கொடுக்கவில்லை என்றால் 100 கோடி ரூபாய் வருகிறது. அதுபோக இருபது மாத அரியர்ஸ் தொகை, 100 கோடி ரூபாய் வழங்க வேண்டும். நாங்கள் தெளிவாக கணக்கோடு புள்ளி விவரத்தோடு தான் கேட்கிறோம். அதனால் என்.டி.சி மோடி அரசு 200 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என்று கூறினார்.