தமிழகத்தில் அதிமுக 10% வாக்குகளை இழந்துள்ளது... தேர்தல் நெருங்கிவிட்டது... எடப்பாடி பழனிசாமி வார்னிங்

சென்னையில் நடைபெற்ற அதிமுக ஐடி விங்க் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது அதிமுக தமிழகத்தில் 10 சதவீத வாக்குகளை இழந்துள்ளதாக கூறியுள்ளார்.

Oct 1, 2024 - 13:36
 0
தமிழகத்தில் அதிமுக 10% வாக்குகளை இழந்துள்ளது... தேர்தல் நெருங்கிவிட்டது... எடப்பாடி பழனிசாமி வார்னிங்
எடப்பாடி பழனிசாமி

சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்திய அளவில் முதலில் தகவல் தொழில்நுட்ப அணியை உருவாக்கிய கட்சி அதிமுக. செய்தித்தாள்களில் தான் மக்கள் செய்திகளை அறிந்துகொண்டிருந்த காலம் மாறி, சமூக வலைதளங்கள் மூலம் செய்திகள் ஒரு நொடியில் சென்று சேர்கிறது. ஊடகங்களும் பத்திரிகைகளும் வேண்டுமென்றே பொய் செய்திகளை வெளியிட்டு வருகின்ற. அந்த பொய்ச் செய்திகளை அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி தான் முறியடிக்க வேண்டும்.

எங்கள் ஆட்சியில் அனுமதி கொடுத்த ஊடகங்களே எங்கள் நெஞ்சில் குத்துகின்றனார். இதற்கு முன்னர் நீங்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. இனி வேகமாக செயல்பட வேண்டும். தேர்தலுக்கு இன்னும் 15 மாத காலம் தான் இடைவெளி உள்ளது. நீங்கள் எந்த அளவுக்கு பணி செய்கிறீர்களோ? வலைதளம் மூலம் செய்திகளை மக்களிடம் கொண்டு செல்கிறீர்களோ அந்த அளவுக்கு கட்சிக்கு பலம் சேர்க்கிறீர்கள். மண்டல செயலாளர்கள் மாவட்ட செயலாளர்களுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் பொறுப்புகள் அனைத்தையும் நிரப்ப வேண்டும். மாநில தலைமையில் இருந்து கிடைக்கும் அனைத்து தகவல்களும் வாக்குச்சாவடி முகவர் வரை கொண்டுசேர்க்க வேண்டும் என்றார்.  

மேலும், தனித்திறமைகளை கொண்டு யூடியூப் சேனல்கள் துவங்கி கழக செய்திகளை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். ஃபேஸ்புக் எக்ஸ் தலை மட்டும் அல்லாமல், இளைஞர்கள் அதிகளவில் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ரீல்ஸ் வாயிலாக பதிவுகளை பதிவிட வேண்டும். உங்களுடைய ஒவ்வொரு செயல்பாடுகளையும் பதிவுகளும் என்னுடைய பார்வைக்கு வந்து கொண்டிருக்கிறது. என்னுடைய நேரடி மேற்பார்வையில் தான் நீங்கள் இருக்கின்றீர்கள் என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். எந்த ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளும் உங்களை அடக்கிக் கொள்ளாதீர்கள், மேலும் உள்ளூர் மக்கள் சார்ந்த பிரச்சினைகளை காணொளிகளாக பதிவிட வேண்டும் எனவும் அவர் கூறினார்.  

அதேபோல், சமூக வலைத்தளத்தில் உங்கள் பதிவுகள் கண்ணியத்துடன் இருக்க வேண்டும். தரம் தாழ்ந்த விமர்சனங்களை தவிர்க்க வேண்டும், நாங்கள் உங்களுக்கு பக்கப்பலமாக இருக்கிறோம், மேலும். மாநில நிர்வாகிகள் அளிக்கும் பணிகளை செவ்வனே செய்ய வேண்டும் என்றார். மீண்டும் அதிமுக ஆட்சி அமைய உங்களது பங்கு மிக முக்கியம். கடைசிக் கட்டத்தில் இருக்கும் மக்களுக்குக் கூட நாம் செய்த சாதனைகள் சென்றுசேர வேண்டும். கட்சி குறித்து பரப்பப்படும் பொய் செய்திகளை முறியடிக்கும் வலிமை உங்களுக்கு இருக்கிறது என்று நம்புவதாகவும் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

மேலும், மாவட்டச் செயலாளரின் பணிகளை காணொளிகளாக பதிவிடுவது தகவல் தொழில்நுட்ப அணியின் பணி கிடையாது. மாவட்ட செயலாளரின் பணிகளை ப்ரோமோட் செய்வதும் ஐ.டி விங் வேலை இல்லை என்றார். இளைஞர்கள் கையில் 40% வாக்கு உள்ளது, இளைஞர்கள் என்ன விரும்புகின்றனர் என்பதை புரிந்து அதற்கேற்றவாறு பதிவு செய்யுங்கள். 10 முதல் 15 சதவீதம் வாக்குகளை நாம் இழந்துள்ளோம், அதனை மீட்கும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டும், இளைஞர்களின் வாக்குகளை நாம் பெற வேண்டும் எனக் கூறினார். அதேபோல், கட்சியின் செயல்பாடுகளை சொல்லுங்கள், பிரச்சனைகளை பதிவு செய்யுங்கள். பொய் செய்திகளை முறியபடிப்பதில் ஐடி விங் பொறுப்பு முக்கியம் உள்ளது. டிஆர்பிக்காக அதிமுக பற்றி ஊடகங்கள் பேசுவதாகவும் குற்றம்சாட்டினார். 

குறிப்பிட்ட பத்திரிகையின் ஒரு பகுதியில் தினம்தோறும் அதிமுக பற்றி எழுதுகிறார்கள். அந்த செய்தி ஆசிரியருக்கும் செய்தியாளருக்கும் நம்மை பற்றி எழுதாவிட்டல் வயிற்று வலி வந்துவிடும் போல. தமிழகத்தில் அதிக ஊடகங்கள் உருவாக காரணமாக இருந்தது நம் ஆட்சி, ஆனால் அவர்கள் நன்றி மறந்து நம் நெஞ்சையே குத்துகிறார்கள். விவாத மேடை எனும் பெயரில் ஆட்சிக்கு ஜால்ரா போடுகிறார்கள். குடிநீர் பற்றாக்குறை இருந்தபோது அதிமுக ஆட்சிக்கு வந்தது. வெளி மாவட்டங்களில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து சென்னையில் விநியோகித்தோம். டெல்டாவை புயல் புரட்டிப் போட்டது, புயலை விட வேகமாக நிவாரண பணி மேற்கொண்டோம். அமைச்சர்கள் 3 மாதம் தங்கியிருந்து நிவாரண பணிகளை மேற்கொண்டனர்.  

அதேபோல், கொரோனாவால் 11 மாதம் அரசாங்கமே ஸ்தம்பித்தது, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள முடியாத நிலையில் மருத்துவத்துறையில் சிறப்பாக பணி செய்தோம். இவையெல்லாம் ஒரு வரலாறு, அமெரிக்காவில் கூட நம்மைப் போல் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட முடியவில்லை. இந்தியாவில் கொரோனா தடுப்பில் நாம் முதலிடத்தில் இருப்பதாக நாட்டின் பிரதமரே பேசினார். அதேபோல் கொரோனா காரணமாக மதுக்கடையை மூடியதால் ஓராண்டு காலம் அரசாங்கத்துக்கு வருமானமே இல்லை. 40 ஆயிரம் கோடி அரசு நிதியில் இருந்து எடுத்து செலவு செய்தோம் என்றார்.  

மேலும், கிராமப்புற மாணவர்கள் பட்டப்படிப்பு படிக்க காரணம் நம் ஆட்சி தான். 10 ஆண்டுகால ஆட்சியில் 17 அரசு மருத்துவக் கல்லூரியை மருத்துவமனையுடன் கொண்டு வந்தோம். மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் இளைஞர்கள். நீட்... நீட்... என்று பேசி காலத்தை நீட்டித்துக் கொண்டிருக்கும் கட்சியாக உள்ளது திமுக. அதிமுக அரசு ஏழைகளின் அரசு என்பதை நிரூபிக்கும் வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் மருத்துவ உள் ஒதுக்கீடு கொடுத்து 3160 மாணவர்களை மருத்துவராகினோம். அதேநேரம் நாம் கட்டிய பாலங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி திமுக அவற்றை திறந்து கொண்டிருக்கிறது, கோவையில் உடனுக்குடன் பாலத்தை கட்டினோம்.

ஐடி விங் நிர்வாகிகளாக புதிதாக 15 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநிலத் தலைமை கேட்கும் விவரங்களை ஐடி விங் நிர்வாகிகள் உடனுக்குடன் அனுப்ப வேண்டும். அதிமுகவின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் உங்களில் யாரெல்லாம் கமெண்ட் செய்கிறீர்கள் என்பது குறித்த பட்டியலை வழங்க வேண்டும். அதிமுக குறித்த செய்திகளை நீங்கள் யூடியூப்களை உருவாக்கி அதில் கூறிக்கொண்டே இருங்கள் என்றார். மேலும், பெரியவர்கள் அதிகம் பயன்படுத்தும் ஃபேஸ்புக், பத்திரிகையாளர்கள் அதிகம் பயன்படுத்தும் டிவிட்டர், இளைஞர்கள் அடிக்கடி பார்க்கும் இன்ஸ்டாகிராமில் பதிவுகளை எழுத வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். 

ஐடி விங் பணிகளை நான் நேரடியாக கண்காணித்து வருவதாகவும், செல்போன்தான் உங்களுக்கு மேடை, செல்போன் வைத்துள்ள நீங்கள் அனைவரும் பத்திரிகையாளர்கள், யாருக்கும் நீங்கள் அஞ்ச வேண்டாம், ஆனால் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வேண்டாம் எனக் கூறியுள்ளார். நம் இலக்கு 2026 தேர்தல் தான், எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் நல்லாட்சி அமைக்க வேண்டும், சமூக வலைதளங்கள் எல்லாவற்றையும் கையாளத் தெரிந்துகொள்ளுங்கள். மாவட்ட செயலாளர்கள் திருமணத்துக்கு போய் தாலி எடுத்து கொடுப்பதை எல்லாம் நீங்கள் பதிவு போட வேண்டாம். அதை மக்கள் விரும்பமாட்டார்கள், இளைஞர்கள் விருப்பப்படி நீங்கள் செயல்படுங்கள், தொண்டர்கள் மறைந்ததால் அதை ஈடு செய்ய இளைஞர்கள் வாக்குகளை பெற வேண்டும். அதிமுகவில் இருந்த வயது முதிர்ந்த தொண்டர்கள் இறந்ததால் கட்சியின் வாக்கு 15 சதவீதம் சரிந்துவிட்டதாக விளக்கம் கொடுத்துள்ளார்.   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow