தமிழ்நாடு

"Get Out Modi என கூற உதயநிதிக்கு தைரியம் இருக்கிறதா?" - அண்ணாமலை ஆவேசம்

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லட்டும் பார்க்கலாம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆவேசமாக பேசியுள்ளார்.


"Get Out Modi என கூற உதயநிதிக்கு தைரியம் இருக்கிறதா?" - அண்ணாமலை ஆவேசம்

கரூர் 80 அடி சாலையில் கரூர் மாவட்ட பாஜக சார்பில் நடைபெறும் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில், மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,

சூப்பர் ஸ்டார் ஒரு காலத்தில் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது என்று சொன்னார். அதுபோல திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. 2016 ஆம் ஆண்டு ஒரு இந்திய குடிமகனின் சராசரி வருவாய் 86 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போது 2025 ஆம் ஆண்டில் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

12 லட்சம் வரை வரி இல்லை என்பது உலகில் எந்த நாட்டிலும் இல்லை எண்பத்தி ஏழு சதவீதம் மக்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது இதனால் மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி சுமை ஏற்பட்டுள்ளது. முதல்வரின் மருமகன் சபரீசன், மகன் உதயநிதி ஆகியோர் வரி விலக்கில் வர மாட்டார்கள் என்பதுதான் முதல்வரின் கோபம். 

தமிழகத்திற்கு மோடி வந்தால் முதலில் "Go Back Modi" என்று கூறினோம். இனிமேல் "Get Out Modi" என்று கூறுவோம் என உதயநிதி பேசியிருக்கிறார். நீ சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லு பார்க்கலாம். என்னுடைய தாத்தா, அப்பா முதல்வர் என்று சொல்லிக் கொண்டு உலக தலைவரை மதிக்காத கத்துக்குட்டி உதயநிதி. சூரியன் உதித்த பின்னர் 11 மணிக்கு வெளியே வரும் உனக்கு இவ்வளவு திமிர் இருந்தால், மக்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்.

உதயநிதிக்கு ஆதரவாக இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி போலீஸாரால் தேடப்படும் நபரான அவர் சென்னை ஈசிஆர்-ல் இருக்கிறார். கரூரில் அவர்களை எதிர்த்தால் கஞ்சா பொட்டலம் வைப்பது, மண் அள்ளியதாக வழக்கு பதிந்து கைது செய்கிறார்கள்.

அன்பில் மகேஷ் காது கொடுத்து கேட்டுக்கோ சைக்கிளில் சென்று பேருந்தில் பயணித்து பள்ளி சென்றவன் நான் என்னிடம் பந்தா காட்ட வேண்டாம். 

மூன்றாவது மொழியாக பிடித்த மொழியை படிக்கலாம் என்று தான் மோடி சொல்கிறார். அவர் எப்போது இந்தியை திணித்தார். தமிழகம் வந்தால் ஆங்கிலத்தில் பேசும் அவர் நம்மிடம் ஏன் இந்தியை திணிக்க போகிறார்.

தமிழக கல்வித் துறை அமைச்சரின் சொந்த ஊரில் மாணவர்கள் அரச மரத்தடியில் படிக்கிறார்கள். ஆனால் அவரது மகன் தனியார் பள்ளியில் பிரெஞ்சு படிக்கிறார். திமுக காரர்கள் நடத்தும் பள்ளியில் மூன்று மொழி. ஆனால், மக்களின் குழந்தைகளுக்கு இரண்டு மொழி. தமிழகத்தில் 52 சதவீதம் பள்ளிகளில் மட்டுமே 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் உள்ளனர். 

2026 இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் மகளிருக்கு 2500 ரூபாயை தாண்டி உதவித்தொகை தரப்படும். கமிஷன் அடிக்காமல் ஆட்சி நடத்தினால் 90 ஆயிரம் கோடி தர முடியும். தமிழகத்தில் தரம் இல்லாத ஆட்சி நடந்து வருகிறது என்று ஆவேசமாக பேசியுள்ளார்.