அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி.. இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.. சி.இ.ஓ. விளக்கம்

தோனியை அன்கேப்ட் வீரராக தக்கவைப்பது குறித்து எங்களால் தற்போது முடிவு எடுக்க முடியாது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.

Oct 2, 2024 - 19:38
Oct 2, 2024 - 19:41
 0
அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி.. இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.. சி.இ.ஓ. விளக்கம்
அடுத்த ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனி?

சர்வதேச போட்டிகளில் மட்டுமல்லாது, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக் தொடர்களில் ஒன்றான, ஐபிஎல்-இலும் மகேந்திர சிங் தோனி பல சாதனைகளை புரிந்துள்ளார். ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேட்பனாக தொடர்ந்து நீடித்துவரும் தோனி, 2010, 2011, 2014, 2018, 2021 மற்றும் 2023 என 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஐபிஎல் தொடர் முழுவதும், தோனிக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டு அணியை வழிநடத்தினார். பிளே ஆஃப் சுற்றோடு சி.எஸ்.கே. வெளியேறினாலும் தோனியின் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் அதிகளவில் மைதானத்தில் குவிந்தனர். சென்னை மட்டுமல்லாது, கொல்கத்தா, மும்பை, டெல்லி, பெங்களூரு என எந்த மைதானமாக இருந்தாலும் மஞ்சள் ஜெர்சியே கோலோச்சியது.

2024 சீசனில் இம்பேக்ட் வீரராக தோனி களமிறங்கினாலும், அவருக்கு கோப்பையுடன் பிரியா விடை கொடுக்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். ஆனால், ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சினாலும் அடுத்த சீசனில் பார்த்துக் கொள்ளலாம் என பொறுமையோடு காத்திருந்தனர்.

ஆனால், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் 5 ஆண்டுகள் மட்டுமே ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க முடியும் என்ற விதி உள்ளது. இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூணாக விளங்கிய மகேந்திர சிங் தோனி அடுத்த ஆண்டு விளையாடுவாரா, மாட்டாரா என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

18வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அந்த தொடருக்கான புதிய ஏல விதிமுறைகளை பி.சி.சி.ஐ. வெளியிட்டது. அதில் அன்கேப்ட் வீரர் என்ற விதிமுறையை பி.சி.சி.ஐ. மீண்டும் கொண்டு வந்துள்ளது. இதனால், 5 ஆண்டுகளான வீரர்களை, இந்திய அணிக்காக விளையாடாதவர் என்று கருதி ஊதியத்தை குறைத்துக் கொள்ளும் புதிய விதியை பிசிசிஐ அறிமுகப்படுத்தியது. இதனால், தோனி விளையாட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், "தோனி விளையாடுவது குறித்து தற்போதைக்கு எதையும் உறுதியாக தெரிவிக்க இயலாது. தோனியை அன்கேப்டு வீரராக பயன்படுத்த முடியாமல் கூட போகலாம். இது குறித்து இன்னும் நாங்கள் அவருடன் கலந்துரையாடவில்லை என்பதால், இது குறித்து தெரிவிக்க தாமதமாகிறது.

தற்போதைக்கு தோனி அமெரிக்காவில் இருந்தார். நாங்கள் இன்னும் அவருடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இப்போது நான் இந்த வாரம் பயணம் செய்கிறேன், எனவே வரும் வாரத்தில் இது குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளது. அதன் பிறகே ஒரு தெளிவு பிறக்கும். அவர் விளையாடுவார் என்று நாங்கள் நம்புகிறோம், தோனி இதை பற்றி முடிவு செய்வார்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow