தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்.. மாநில அரசுகளுக்கு தண்டனை வழங்குவதா? தெலங்கானா முதல்வர் கேள்வி..!
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. அனைவரையும் கனிமொழி எம்.பி.வரவேற்று பேசினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் பங்கேற்றார்.

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர்கள், துணை முதல்வர்கள், கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு தொகுதி மறுசீரமைப்பு குறித்து தங்களது நிலைபாட்டை தெரிவித்தனர். கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவத் மான், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றிய நிலையில், தெலுங்கானா, ஒடிசா, பஞ்சாப், கேரளம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த தலைவர்கள் தங்களின் நிலைபாட்டை தெரிவித்தனர்.
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி
மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநில அரசுகளுக்கு, தொகுதியை குறைத்து தண்டனை வழங்குவதா? என்று தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கேள்வி எழுப்பினார். கூட்டுநடவடிக்கை குழு கூட்டத்தில் பேசிய அவர், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் முன்னெடுப்பிற்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார். மக்கள் பிரநிதிகளை குறைப்பதன் மூலம், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநில அரசுகளுக்கு தண்டனை வழங்குகிறதா என்று கேள்வி எழுப்பிய அவர், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிராக கட்சி வேறுபாடுகளை களைந்து போராட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பா.ஜ.க. தலைமையிலான அரசு எப்போதும் மாநில அரசுகளின் கருத்துகளை கேட்பதில்லை, பேசவிடுவதும் இல்லை என்றும், பா.ஜ.க. நினைப்பதையே முடிவாக எடுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்
நாட்டின் வளர்ச்சிக்காகவே மக்கள் தொகையை கட்டுப்படுத்தியுள்ளதாகவும், மக்கள் தொகையை கட்டுப்படுத்தியிருக்காவிடில் மக்கள் தொகை அதிகரித்து நாட்டின் வளர்ச்சியை அது பாதித்திருக்கும் என்றும் அப்போது தெரிவித்தார். தொடர்ந்து பேசுகையில், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வது நியாயமற்றது என்று விமர்சித்த அவர், பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கான முக்கியமான கூட்டம் இது என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த்
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்று பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த்மான் பேசியதாவது, கூட்டத்தை கூட்டியுள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றியை முதலில் தெரிவித்துக் கொண்டார். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு கூடாது என்று கூறியவர், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு மத்திய அரசு தண்டனை அளிப்பதாகவும் அதிருப்தி தெரிவித்தார். தமிழ்நாடு பஞ்சாப் மட்டுமல்ல, மக்கள் தொகையினை கட்டுப்படுத்திய அனைத்து மாநிலங்களுக்கும் இதனால் பாதிப்பு என்றும் பேசியவர், முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் தெரிவித்தார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
தொகுதி மறுவரையறை என்பது எண்ணிக்கை மட்டுமல்ல, இந்தியாவின் ஆன்மாவான கூட்டாட்சி சம்பந்தப்பட்ட விவகாரம் என தெரிவித்தார். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை எனவும், தென் மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறைவது பாஜகவின் ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் எனவும் கூறினார். மேலும், தொகுதி மறுவரையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், ஏற்கனவே மத்திய அரசு நிதிகளை தராமல் நம்மை தண்டித்துள்ளது எனவும் தெரிவித்தார். பின்னர், மாநிலங்களின் ஒன்றியமே இந்திய நாடு என்றும் பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம் என்றும் பினராயி விஜயன் கூறினார்.
What's Your Reaction?






