தமிழ்நாடு

இந்தியாவுக்காக ஓரணியில் திரண்டுள்ளோம் - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையை ஒரு போதும் ஏற்கக்கூடாது என்றும், இந்தியாவுக்காக ஓரணியில் திரண்டுள்ளோம் என்றும் கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்காக ஓரணியில் திரண்டுள்ளோம் - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
இந்தியாவுக்காக ஓரணியில் திரண்டுள்ளோம் - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. அனைவரையும் கனிமொழி எம்.பி.வரவேற்று பேசினார். 

இதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சியை காக்க ஒன்று திரண்டிருப்பதாகவும்,  இந்தியக் கூட்டாட்சியைக் காக்கும் முக்கியமான நாளாக இந்த நாள் அமையப் போகிறது என்றும் தெரிவித்தார். தொகுதி மறுசீரமைப்பு நமது மாநிலங்களை வெகுவாக பாதிக்கப்போகிறது என்பதால் கடுமையாக எதிர்ப்பதாகவும், தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறையை ஒரு போதும் ஏற்கக்கூடாது என்றும் தெரிவித்தார். இது வெறும் எண்ணிக்கையை பற்றியது மட்டுமல்ல; நமது அதிகாரம்,  எதிர்காலம், நமது உரிமைகளின் நலன் பற்றியது என்றும் கூறினார்.

மக்களை பாதிக்கும் முடிவுகள் எடுக்கப்படும். பெண்கள் அதிகாரம் அடைவதில் பின்னடைவை சந்திப்பார்கள். மாணவர்கள் முக்கிய வாய்ப்புகளை இழப்பார்கள். நமது பண்பாடு அடையாளம், முன்னேற்றம் அபாயத்தை சந்திக்கும். சமூக நிதியும் பாதிக்கப்படும். குறிப்பாக, பட்டியலின, பழங்குடி மக்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.

தற்போதைய மக்கள்தொகைக்கு ஏற்ப தொகுதிகள் நிர்ணயம் நடக்கக்கூடாது. நாம் அனைவரும் அதை எதிர்ப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் குறைந்து வருவதால், நமது கருத்துக்களை வெளிப்படுத்தும் வலிமை குறையும். எனவே தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை சாதாரணமாக கருதக் கூடாது என்று சொல்கிறன். 

இந்த போராட்டம் மறுசீரமைப்புக்கு எதிரானது அல்ல. இந்த போராட்டம் நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கான போராட்டம் என்று தெரிவித்த முதலமைச்சர்,  இந்த குழுவுக்கு நியாயமான தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு என்று 
பெயரிட்டார்.

உரிமைகளை நிலை நாட்டிட தொடர் போராட்டம் அவசியம் என்ற முதலமைச்சர் இது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்துவதோடு, மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார். ஒற்றுமை உணர்வோடு அனைவரும் ஒன்று பட்டு போராடினால்தான் வெற்றி பெற முடியும். எந்த சூழ்லிலும் நமது பிரதிநிதித்துவம் குறைய விடக்கூடாது என்ற உறுதியுடன் போராடுவோம் என்றும் பேசினார்.