உலகம்

ChatGPT-யால் வந்த வினை.. குடும்பத்தை பிரித்த காபி கப்

ChatGPT-யில் தனது கணவர் காபி அருந்தியது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து டாசியோகிராஃபி முறையில் விளக்கம் கேட்ட போது, கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக ChatGPT பதில் அளித்ததால், விவாகரத்து நோக்கி நகர்ந்துள்ளார் மனைவி.

ChatGPT-யால் வந்த வினை.. குடும்பத்தை பிரித்த காபி கப்
woman filed for divorce after ChatGPT allegedly interpreted coffee cup photos
செயற்கை நுண்ணறிவு என்னும் AI பயன்பாடு, நாளுக்கு நாள் மனிதர்களின் வாழ்வில் அதிகரித்த வண்ணம் உள்ளது. பல மணி நேரம் செய்யக்கூடிய வேலையினை நொடி பொழுதில் செய்து முடித்துவிடுவதால் AI தொழில்நுட்பம் அனைத்துத் துறைகளிலும் தவிர்க்க முடியாத அம்சமாக மாறியுள்ளது. இந்நிலையில் புகழ்பெற்ற ChatGPT AI ஒரு குடும்பத்தை பிரிக்க காரணமாக இருந்துள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா? அப்படியொரு செய்தி தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

12 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி:

கிரேக்கத்தைச் சேர்ந்த ஒரு நபர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில், ChatGPT தன்னை ஒரு ஏமாற்றுக்காரனாக சித்தரித்து தனது திருமணத்தை எவ்வாறு நாசமாக்கியது என்கிற கதையைப் பகிர்ந்து கொண்டார். 12 வருட திருமண வாழ்க்கையினை ChatGPT அளித்த ஒற்றை பதிலை அடிப்படையாக கொண்டு முறித்துக் கொள்ள முடிவெடுத்துள்ளார் மனைவி.

அந்த பெண் தனது கணவருக்கு காபி போட்டுக் கொடுத்துள்ளார். அதன் பின் அவர் குடித்த காபி கப்பினை புகைப்படம் எடுத்து, ChatGPT-யிடம் டாசியோகிராஃபி (Tasseography) முறையில் குறி கேட்டுள்ளார். அதிர்ச்சியூட்டும் வகையில், ChatGPT “அந்த ஆணுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது. 'E' என்ற எழுத்தில் தொடங்கும் பெண்ணைப் பற்றி அவர் கற்பனை செய்து வருவதாகவும்” பதிலளித்தது.

AI-யின் விளக்கம் அந்தப் பெண்ணை கோபப்படுத்தியது. அவர் இதுக்குறித்து தனது கணவரிடம் விவாதிக்காமல், விவாகரத்து முடிவை எடுத்துள்ளார். இதுக்குறித்து அந்த நபர் தனியார் நிகழ்ச்சியில் கூறுகையில், "என் மனைவி ChatGPT அளித்த பதில் குறித்து கூறுகையில், நான் அதை நினைத்து முட்டாள்தனமாக சிரித்தேன். ஆனால் அவள் அதை தீவிரமாக எடுத்துக் கொண்டாள். அவள் என்னை அறையிலிருந்து வெளியேறச் சொன்னாள். எங்கள் 2 குழந்தைகளிடம் நாங்கள் விவாகரத்து பெறுகிறோம் என்று சொன்னாள், பின்னர் எனக்கு ஒரு வழக்கறிஞரிடமிருந்து அழைப்பு வந்தது. அப்போதுதான் இது வேறு இடத்தை நோக்கி நகர்கிறது என்பதை உணர்ந்தேன்," என்று குறிப்பிட்டுள்ளார். கணவருக்கு விவாகரத்து வழங்க விருப்பமில்லை என்கிற நிலையில், சட்டப்பூர்வமாக மனைவியின் முடிவை எதிர்க்கொள்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

டாசியோகிராஃபி என்றால் என்ன?

"Tasseography" என்பது நமது நாட்டில் கை ரேகை ஜோசியம் பார்பது போல், தேயிலைத் தூள்களின் வடிவங்களை ஆராய்ந்து, எதிர்காலத்தைப் பற்றிய கணிப்புகளைச் சொல்லும் ஒரு வகை குறி சொல்லும் முறை. சுருக்கமாகச் சொன்னால், தேயிலை மூலம் குறி சொல்லுதல் எனலாம்.

இம்முறையானது உலகம் முழுவதும் பல கலாச்சாரங்களில் தொன்றுத் தொட்டு தற்போது வரை செயல்பாட்டில் இருக்கிறது. தேநீர் அருந்திய பிறகு கோப்பையில் தங்கும் தேயிலைத் துகள்களின் வடிவங்களை வைத்து, அவற்றின் அமைப்பு மற்றும் தோற்றத்தின் அடிப்படையில் பலன்கள் சொல்லப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.