உலகம்

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை.. சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்!

இந்தோனேசியாவில் உள்ள லக்கி லக்கி எரிமலை வெடித்துச் சிதறி, வானுயரத்துக்கு தீக்குழம்பு வெளியேறியது.

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை.. சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்!
Volcano erupts in Indonesia
பூமியின் "பசிபிக் நெருப்பு வளையம்" பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியாவில், அடிக்கடி நிலநடுக்கங்களும் எரிமலை வெடிப்புகளும் ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில், எழில் கொஞ்சும் புளோரஸ் தீவில் அமைந்துள்ள லெவோடோபி லக்கி-லக்கி (Mount Lewotobi Laki-Laki) எரிமலை நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது.

இந்த 1,500 மீட்டர் உயர எரிமலையில் இருந்து சுமார் 10 முதல் 20 கிலோமீட்டர் உயரத்திற்குத் தீக்குழம்பு சீறிப் பாய்ந்து வெளியேறியது. இதனால் அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் 8 கிலோமீட்டர் தூரம் வரை ஆறாக ஓடியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் எச்சரிக்கைகள்

பாதுகாப்புக் கருதி, உடனடியாக சுமார் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எரிமலை அருகே இருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் கிராம மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக எரிமலையின் உள்ளே வாயு குவிப்பு ஏற்பட்டதே இந்த வெடிப்புக்குக் காரணம் என்று புவியியல் ஆய்வு மையத் தலைவர் முஹம்மது வாஃபிட் கூறியுள்ளார். குறிப்பாக, எரிமலைக்கு அருகில் ஆறுகள் பாயும் பகுதிகளில், கனமழை பெய்தால் லாஹர் வெள்ளம் (எரிமலைக் குப்பைகள் மற்றும் சேறு கலந்த வெள்ளம்) ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகளும், கிராம மக்களும் எரிமலைக் குழியிலிருந்து ஆறு கிலோமீட்டர் சுற்றளவிற்குள்ளாக வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

லக்கி-லக்கி மற்றும் பெரெம்புவான்

இந்தோனேசிய மொழியில் 'லக்கி-லக்கி' என்றால் 'ஆண்' என்று பொருள். இந்த எரிமலைக்கு அருகிலேயே, 'பெரெம்புவான்' (பெண்) என்று பொருள்படும் மற்றொரு எரிமலையும் உள்ளது. இது 1,703 மீட்டர் உயரம் கொண்டது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.