பிரபல ரஷ்ய பாலே (Ballet) நடன கலைஞர் விளாடிமிர் ஷ்கிலியாரோவ், மாரின் ஸ்கை திரையரங்கில் உள்ள கலைஞர்களின் பட்டியலில் முக்கிய தரவரிசையில் உள்ளார்.
லெனின்கிராடில் (Leningrad) பிறந்த விளாடிமிர் ஷ்கிலியாரோவ், பாலே (Ballet) நடனத்தில் பட்டப்படிப்பு பயின்றார். 2003-ஆம் ஆண்டு மாரின்ஸ்கை திரையரங்கில் நடன கலைஞராக பணியில் சேர்ந்த இவர் தன் திறமையால் 2011-ஆம் ஆண்டிற்குள் மிக உயர்ந்த நிலையை அடைந்தார்.
விளாடிமிர் ஷ்கிலியாரோவ் ‘ஸ்வான் லேக்’, ‘ஸ்லீப்பிங் பியூட்டி’, ‘ரோமியோ ஜூலியர்’ போன்ற பல்வேறு தயாரிப்புகளில் முக்கிய கலைஞராக நடித்துள்ளார். மேலும், லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் நடைபெறும் பாலே நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டுள்ளார்.
பல்வேறு விருதுகளை பெற்ற விளாடிமிர் ஷ்கிலியாரோவ், கடந்த 2020-ஆம் ஆண்டு ரஷ்யாவின் சிறந்த கலைஞர் என கவுரவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இவர் மாரின் ஸ்கை திரையரங்கின் ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இவரது இறப்பை அந்த திரையரங்கம் உறுதி செய்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இந்த விபத்து தற்செயலாக நடந்ததாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளாடிமிர் ஷ்கிலியாரோவ் இறப்பு பெரும் கவலையளிப்பதாகவும், இது பாலே நடனக்குழுவிற்கு மிகப்பெரிய இழப்பு என்று சக நடன கலைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது நடனத்தின் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
விளாடிமிர் ஷ்கிலியாரோவ் நடனத்தில் மட்டுமல்லாமல் சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டவராக இருந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் உக்ரை-ரஷ்யா இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வந்தார். இதுதொடர்பாக தனது சமூக வலைதளத்திலும் கருத்துகளை பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.