உலகம்

இந்தியாவிற்கு நிதி தருவதால் அமெரிக்காவிற்கு என்ன பயன்..? டிரம்ப் பேச்சு

இந்தியாவில் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க கட்டாயம் நிதி தர வேண்டுமா?, அதனால் அமெரிக்காவிற்கு என்ன பயன்?  என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவிற்கு நிதி தருவதால் அமெரிக்காவிற்கு என்ன பயன்..? டிரம்ப் பேச்சு
டொனால்ட் டிரம்ப்

அமெரிக்கா சார்பில் உலகம் முழுவதும் சுமார் 180 நாடுகளுக்கு ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதில், உக்ரைன், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு பெருமளவு உதவி வழங்கி வருவதாக கூறப்படுகிறது.  இதையடுத்து, கடந்த 20-ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் ‘அரசு செயல் திறன்’ என்ற புதியத் துறையை உருவாக்கினார். 

இதன் தலைவராக தொழிலதிபர் எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார். அமெரிக்க செலவினங்களை குறைப்பதற்காக இந்த துறை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி ரத்து செய்யப்பட்டதாக  அரசு செயல் துறை திறன் (டிஓடிஜி) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டு அறிவித்திருந்தது.

இதில், இந்தியாவின் வாக்கு  சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா சார்பில் வழங்கப்பட்டு வந்த  182 கோடி ரூபாய் (21 மில்லியன் அமெரிக்க டாலர்) ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும், வங்கதேசத்தில் அரசியல் சூழலை வலுப்படுத்த ஒதுக்கப்பட்ட 251 கோடி ரூபாய் நிதி உதவியையும் அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது. இச்சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்தியாவிடம் அதிகம் பணம் உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் பேசியதாவது, நாம் ஏன் இந்தியாவிற்கு 21 மில்லியன் அமெரிக்க டாலர்களை ( இந்திய மதிப்பில் 182 கோடி ரூபாய்) வழங்க வேண்டும். அவர்களிடம் அதிக பணம் இருக்கிறது. வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் அதிக வரி விகிதங்களைக் கொண்ட இந்தியாவிற்கு அத்தகைய நிதி உதவி தேவையில்லை. 
எங்களைப் பொறுத்தவரை அவர்கள் உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாகும். 

அவர்கள் அதிகமாக வரி விதிப்பதால் நாங்கள் அங்கு செல்ல முடியாது. இந்தியா மற்றும் அவர்களின் பிரதமர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இந்தியாவில் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க கட்டாயம் நிதி தர வேண்டுமா?, அதனால் அமெரிக்காவிற்கு என்ன பயன்?  என்று கேள்வி எழுப்பினார்.