உலகம்

கருணை, பணிவு, சீர்த்திருத்தத்தின் உருவம்.. போப் பிரான்சிஸ்-ன் வாழ்க்கை பயணம்..

உலக கிருஸ்துவர்களின் ஒரே நம்பிக்கையாக இருந்த போப் பிரான்சிஸ் காலமானார் கருணை, பணிவு, சீர்த்திருத்தங்களால் நிறைந்த இவரது வாழ்க்கை பயணத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு

1936ம் ஆண்டில் அர்ஜென்டினாவின் ப்யூனஸ் ஏரீஸில் பிறந்தவர் போப் பிரான்சிஸ் என்கிற ஜார்ஜ் மாரியோ பெர்கோலியோ.வேதியியல் துறையில் முதுகலை பெற்ற அவர், கிருஸ்துவ மதத்தின் மீது தீவிர ஈடுபாடு இருந்ததால், 1958இல் இயேசு சபையில் இணைந்தார். 1969ல், அதாவது தன்னுடைய 33வது வயதில் குருவாக ஓதுவிக்கப்பட்டவர், 1998இல் ப்யூனஸ் ஐர்ஸின் தலைமை ஆயராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2001இல் போப் ஜான் பால் II அவர்களால் கார்டினலாக உயர்த்தப்பட்டார்.

எளிமையான வாழ்க்கை முறை மற்றும் ஏழைகளுக்கான கருணை உணர்வுடன் வாழ்ந்தவர் இவர், 2013 மார்ச் 13ம் தேதி அன்று, போப் பெனடிக்ட் XVI பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, 266வது போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்றாம் கிரிகோரிக்கு பிறகு, 1,200 ஆண்டுகள் கழித்து ஐரோபாவிலிருந்து இல்லாமல் அமெரிக்கவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு போப் தான் பிரான்சிஸ். அப்போது அவர், அமைதி மற்றும் இயற்கைப் பாதுகாப்பை மிகமுக்கியமானதாக கருதிய அஸ்ஸிசியின் புனித பிரான்சிஸை நினைவுகூர்ந்து, தனது பெயரை “பிரான்சிஸ்” என மாற்றிக்கொண்டார்.

ஆரம்பக்காலத்தில் இருந்தே பழமைவாதத்தை உடைத்தெறிந்தவர் போப் பிரான்சிஸ். வழக்கமாக போப்கள் தங்குவதற்காக வழங்கப்படும் Papal அரண்மையை வேண்டாம் என சொல்லிவிட்டு, சாதரண வாட்டிகன் guest houseல் அவர் தங்கினார். இதன் மூலம் பல அர்த்தமற்ற பாரம்பரியங்களையும், கலாச்சாரத்தையும் பின்பற்றக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்தார் பிரான்சிஸ்.

போப்பாக இருந்த காலத்தில், பல முக்கியமான மாற்றங்களை Pope Francis கொண்டுவந்துள்ளார். வாடிக்கன் நிர்வாகத்தை மறுசீரமைத்து, நிதி ஒழுங்கமைப்பில் வெளிப்படைத்தன்மையை உருவாக்கினார். தேவாலயத்தில் நடந்த பாலியல் குற்றச்செயல்களை எதிர்த்துப் பல சட்ட மாற்றங்களை கொண்டு வந்தார். இதில் குழந்தைகளுக்கு எதிராக தவறுகள் செய்யும் போப்கள், தப்பிக்கமுடியாமல் செய்ய ஒரு குழுவையும் அமைத்துள்ளார். 2015ல், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து ’Laudato Si’ எனும் முக்கியமான ஆவணத்தை வெளியிட்டு, சுற்றுச்சூழலை பாதுகாப்புக்கான முக்கியத்துவத்தை உலகிற்கு எடுத்துரைத்தார்.

ஏழைகள், அகதிகள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்த இவர், மதங்களுக்கிடையிலான ஒற்றுமையை ஊக்குவித்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஈராக் போன்ற முஸ்லிம் பெரும்பான்மையுள்ள நாடுகளுக்குச் சென்று அமைதிக்கான அழைப்பு விடுத்தார்.

கருணை மற்றும் அனைவரையும் உள்ளடகிக்க உலகம் உருவாக வேண்டும் எனதில் தீர்க்கமாக இருந்த இவர், மூன்றாம் பாலினத்தவருக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். அதுமட்டுமல்லாது, தேவாலயத்தில் பெண் உரிமைக்கு வழிவகுத்தார். இதனால் கத்தோலிக்க திருச்சபை குறித்த முக்கிய முடிவுகளில், ஆண்கள் மட்டுமே வாக்களித்து வந்த நிலையில், போப் பிரான்சிஸ் தலைமையின் கீழ் பெண்களும் வாக்களிக்க வழிவகை செய்யப்பட்டது.

இப்படி உலக மக்களால் பெரிதாக போற்றப்பட்ட போப் பிராசிஸ் சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட இவர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தார். சிகிச்சைகள் முடிந்து, வாட்டிகனில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட இவர் 2025ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி தன்னுடைய 88வது வயதில் காலமானார்..

இந்நிலையில், உலகமெங்கும் உள்ள கிருஸ்தவர்களின் நம்பிக்கை ஒளியாக இருந்த போப் பிரான்சிஸ் ஏசு உயிர்த்தெழுந்ததையடுத்து வரும் ஈஸ்டர் திங்களன்று உயிர்நீத்தார். ஒரு போப்பாக பணிவு, கருணை, சமூக சீர்திருத்தம் நிறைந்த பிரான்சிஸில் இந்த பயணத்தை பலரும் நினைவுக்கூர்ந்து வருகின்றனர்.