உலகம்

போப் பிரான்சிஸ் மறைவு.. வரும் 26-ஆம் தேதி இறுதி சடங்கு.. வாடிகன் அறிவிப்பு

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு வரும் 26-ஆம் தேதி நடைபெறும் என்று வாடிகன் அறிவித்துள்ளது.

போப் பிரான்சிஸ் மறைவு.. வரும் 26-ஆம் தேதி இறுதி சடங்கு.. வாடிகன் அறிவிப்பு
போப் பிரான்சிஸ் மறைவு.. வரும் 26-ஆம் தேதி இறுதி சடங்கு.. வாடிகன் அறிவிப்பு
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) வயது மூப்பு காரணமாக கடந்த 21-ஆம் தேதி காலமானார். தென் அமெரிக்காவின் அர்ஜென்டினாவை பூர்வீகமாக கொண்ட அவர் 2013-ம் ஆண்டு முதல் தற்போது வரை கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பதவி வகித்து வந்தார்.

உடல் நலம் பாதிப்பு

கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி நிமோனியா நோய் காரணமாக போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இல்லம் திரும்பிய போப் பிரான்சிஸ் சமீப காலமாக ஓய்வெடுத்து வந்தார்.

ஈஸ்டருக்கு வாழ்த்து

ஈஸ்டர் திருநாளையொட்டி வாடிகன் சதுக்கத்தில் கூடிய மக்களை சந்தித்த போப் பிரான்சிஸ் அவர்களை நோக்கி கையசைத்தார். தொடர்ந்து, அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் உள்ளிட்டோர் போப் ஆண்டவரை சந்தித்து ஆசி பெற்றனர்.

தலைவர்கள் இரங்கல்

போப் பிரான்சிஸ் கடந்த 21-ஆம் தேதி காலமான நிலையில் பிரதமர் மோடி உட்பட உலக தலைவர்கள் பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர். இந்தியாவில் மூன்று நாட்கள் அனுசரிக்கபப்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது, மேலும், போப் பிரான்சிஸ் இறுதி சடங்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ எஸ். இருதயராஜ் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இறுதி சடங்கு

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு வரும் 26-ஆம் தேதி நடைபெறும் என்று வாடிகன் தெரிவித்துள்ளது. போப் பிரான்சிஸின் உடல் இன்று காலை 9 மணிக்கு காசா சாண்டா மார்ட்டாவின் தேவாலயத்திலிருந்து புனித பீட்டர்ஸ் பேராலயத்துக்கு எடுத்து செல்லப்படும்.

தொடர்ந்து, இன்று முதல் வரும் 26-ஆம் தேதி காலை 10 மணி வரை போப் பிரான்சிஸின் உடல் புனித பீட்டர்ஸ் பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் போப் பிரான்சிஸின் ஆன்மா இளைப்பாறுவதற்காக ஒன்பது நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு திருப்பலிகள் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.