உலகம்

Judge Frank Caprio: ‘உலகின் மிகவும் கனிவான நீதிபதி’ பிராங்க் காப்ரியோ மறைவு…இரக்கமுள்ள தீர்ப்புகள் மூலம் பிரபலமானவர்

கணையப் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் நீதிபதி பிராங்க் காப்ரியோ 88 வயதில் காலமானார்

 Judge Frank Caprio: ‘உலகின் மிகவும் கனிவான நீதிபதி’ பிராங்க் காப்ரியோ மறைவு…இரக்கமுள்ள தீர்ப்புகள் மூலம் பிரபலமானவர்
அமெரிக்காவின் பிராவிடன்ஸ் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஃபிராங்க் காப்ரியோ
‘உலகின் மிகவும் கனிவான நீதிபதி’ , ‘மேன்மையான நீதிபதி’ என்று அழைக்கப்படும் ஃபிராங்க் காப்ரியோ, கணையப் புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் 88 வயதில் நேற்று ( ஆக.20) காலமானார்.

கணையப்புற்றுநோய் பாதிப்பால் மறைவு

இவர் அமெரிக்காவின் பிராவிடன்ஸ் நீதிமன்றத்திற்கு பல ஆண்டுகளாக தலைமை தாங்கியுள்ளார்.அவரது இரக்கமுள்ள தீர்ப்புகள் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர்.அவரது நிகழ்ச்சியான ‘காட் இன் பிராவிடன்ஸ்’ மூலம் இவரின் அணுகுமுறை மற்றும் இரக்கமுள்ள மற்றும் உணர்வுப்பூர்வமான பரிந்துரைகள் வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் புகழை பெற்று தந்தது.

அவரது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிரப்பட்ட அறிக்கையின்படி, ரோட் தீவின் முன்னாள் பிராவிடன்ஸ் நீதிபதி "கணைய புற்றுநோயுடன் நீண்ட மற்றும் துணிச்சலான போராட்டத்திற்கு பிறகு 88 வயதில் காலமானார்." ஃபிராங்க் காப்ரியோ வெறும் ஒரு நீதிபதி மட்டுமல்ல. கிட்டத்தட்ட 40 ஆண்டுகள், ரோட் தீவில் உள்ள பிராவிடன்ஸ் நகராட்சி நீதிமன்றத்தில் பணியாற்றினார். தனது நகைச்சுவை, அணுகுமுறை மற்றும் இரக்கமுள்ள தீர்ப்புகளால் பல்வேறு இதயங்களை வென்றுள்ளார்.

இரக்கமுள்ள தீர்ப்புகள் மூலம் பிரபலம்

குறிப்பாக அவரது நீதிமன்ற அறை ஒரு பாதுகாப்பான பகுதியாக அனைவராலும் உணரப்பட்டது. காரணம் சிறிய குற்றங்களுக்குக் கூட கடும் தண்டனை விதிக்கப்படும் நிலையில் சிக்னல் விதிமுறைகள் மீறல் போன்ற வழக்குகளில் இவரின் தீர்ப்புகள் கருணை மற்றும் மனிதாபிமானத்துடன் கூடியதாக இருந்துள்ளது. இந்த உணர்வுப்பூர்வமான தீர்ப்புகளை வீடியோவாகப் பதிவு செய்து காட் இன் பிராவிடன்ஸ் நிகழ்ச்சி மூலம் வெளியிட்ட நிலையில், நீதிபதி ஃபிராங்க் காப்ரியோவுக்கு உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்டார். குறிப்பாகத் தமது நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்கள் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் இவரின் தீர்ப்பு சிறந்த மனிதநேயத்தையும், அதே நேரம் கண்டிப்பையும் தரும் வகையில் அமைந்துள்ளது.

2018 மற்றும் 2020க்கு இடையில் இவரின் தீர்ப்புகள் குறித்தான வீடியோ வைரலாகி பெரும் பாராட்டைப் பெற்றது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றன. இதன் மூலம் நீதிபதியே ஒரு பிரபல நட்சத்திரமாக மாறினார்.

நீதிபதிக்கு பாராட்டு

குறிப்பாக இவரின் தீர்ப்பு குறித்தான ஒரு வீடியோ பல்வேறு நன்மதிப்புகளை அவருக்கு உலகம் முழுவதும் பெற்று கொடுத்தது. போக்குவரத்து அபராதம் தொடர்பாக 96 வயதான முதியவர் ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகி தனது மாற்றுத்திறனாளி மகனைத் தான் பார்த்துக்கொள்வதாகத் தனக்கு புற்றுநோய் இருப்பதால் அதற்கும் மருத்துவ செலவுகளைத் தான் கவனித்து வருவதாகக் கண்ணீர் மல்கப் பேசி இருப்பார். அதற்கு நீதிபதியோ, நீங்கள் தான் அமெரிக்காவின் சிறந்த குடிமகன். உங்கள்மீதான வழக்கை டிஸ்மிஸ் செய்கிறேன். நீங்கள் செல்லலாமெனக் கூறி இருப்பார். இந்த வீடியோ வெளியாகி அனைவரின் பாராட்டுக்களை பெற்றது.

ரோட் தீவின் முன்னாள் நீதிபதி பிராங்க் காப்ரியோ டிசம்பர் 2023ல் தனக்கு கணைய புற்றுநோய் இருப்பதை வெளிப்படுத்தினார். இதனால் உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள், நலன் விரும்பிகள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

நீதிபதி மறைவுக்கு இரங்கல்

கதிர்வீச்சு சிகிச்சைகள், மருத்துவமனையில் தங்குதல் மற்றும் அவ்வப்போது ஏற்படும் பின்னடைவுகள் பற்றிய புதுப்பிப்புகளை வீடியோக்கள்மூலம் பகிர்ந்து வந்தார். எப்போதும் நன்றியுணர்வு மற்றும் நம்பிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தி வந்ததாகவும், வலியிலும்கூட நகைச்சுவை உணர்வு அவருக்கு இல்லாமல் இருந்ததில்லை. எப்போது நகைச்சுவையாகப் பேசக்கூடியவர் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தான் கணையப் புற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் நீதிபதி பிராங்க் காப்ரியோ நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவு உலகம் முழுவதும் இவரின் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாகக் கூடத் தனக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தான வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார். மனிதநேயம் கொண்ட நீதிபதி என்ற பெயர் பெற்ற பிராங்க் காப்ரியோவின் இறுதி சடங்குகள் இந்த வார இறுதியில் நடக்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக துபாய் சென்ற நீதிபதி ஃபிராங்க் காப்ரியோவுக்கு அங்குள்ள மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இருந்தது.இந்த நிலையில் இவரின் மறைவுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.