உலகம்

6 வயது சிறுமியை மணம் முடித்த 45 வயது நபர்.. வேடிக்கை பார்க்கும் தாலிபான் அரசு

ஆப்கானிஸ்தானில் 45 வயது நபர் 6 வயது சிறுமியை மணம் முடித்த நிலையில், அவருக்கு தண்டனை வழங்காமல் திருமணத்தை மறைமுகமாக தாலிபான்கள் அரசு ஆதரித்துள்ளதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

6 வயது சிறுமியை மணம் முடித்த 45 வயது நபர்.. வேடிக்கை பார்க்கும் தாலிபான் அரசு
Child Marriage Surges in Afghanistan Under Taliban Rule
ஆப்கானிஸ்தானில் 45 வயது நபர் ஒருவர் 6 வயது சிறுமியை மணம் முடித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சிறுமிக்கு 9 வயது ஆகும் வரை காத்திருங்கள் என ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளது மேலும் விவாதங்களை கிளப்பியுள்ளது.

கடந்த ஜூன் மாதம், ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள ஹெல்மண்ட் மாகாணத்தில் 45 வயதான நபர் ஒருவர் மூன்றாவதாக 6 வயது சிறுமியை மணந்தார். இதற்கு கைமாறாக சில ஆயிரம் பணத்தினை குழந்தையின் தந்தையிடம் வழங்கினார். இந்த விவகாரம் ஆப்கானிஸ்தானில் புயலை கிளப்பியது.

உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் நல செயற்பாட்டாளர்கள் இந்த சம்பவத்தினை கண்டித்து குரல் கொடுத்தனர். அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், திருமணம் செய்த 45 வயதான நபரை கைது செய்தனர் தாலிபான் அதிகாரிகள். கடமைக்கு என சிறிது நேரம் காவலில் வைத்து, விடுதலை செய்தனர்.

தாலிபான் அரசு இந்த திருமணத்தை ரத்து செய்யும் என எதிர்ப்பார்த்த நிலையில், அதற்கு மாறாக சிறுமிக்கு 9 வயது ஆகும் வரை நீங்கள் சிறுமியுடன் இணைத்து வாழ முடியாது என உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியை தந்துள்ளது.

ஆப்கானிஸ்தானும்- குழந்தை திருமணமும்:

யுனிசெஃப் தரவுகளின் படி, உலகிலேயே அதிகளவில் குழந்தைத் திருமணம் நடைப்பெறும் நாடுகளில் ஒன்று ஆப்கானிஸ்தான். இந்த நாட்டில் 57 சதவீத பெண்கள் 19 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள். 21 சதவீத பேர் 15 வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள்.

2021 ஆம் ஆண்டு தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் சிவில் சட்டமானது, பெண்களுக்கு குறைந்தபட்ச திருமண வயதை 16 ஆகவும், ஆண்களுக்கு 18 ஆகவும் நிர்ணயித்தது. தாலிபான்கள் ஆட்சியில் குறைந்தபட்ச திருமண வயது என எதுவும் இல்லை.

சிவில் சட்டங்கள் பலவும் தாலிபான்கள் ஆட்சியில் கைவிடப்பட்டுள்ளன. இஸ்லாமிய சட்டத்தின் படி ஆட்சி நடத்தி வரும் தாலிபான்கள் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குழந்தை திருமணங்கள் நடைப்பெறுவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது வறுமை தான்.

போர், தாலிபான்களின் கட்டுப்பாடு என பல்வேறு குடும்பங்கள் ஆப்கானிஸ்தானில் வறுமையில் வாடி வரும் சூழ்நிலையில், பெண் குழந்தைகளை பொருளாதார சுமைகளாக பார்க்கின்றனர் ஆப்கானிஸ்தானியர்கள். இதனால், வரதட்சணை பெற்றுக் கொண்டு இளம் சிறார்களை திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.

ஏன் குழந்தை திருமணம் ஆபத்தானது?

15 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரசவத்தின் போது இறப்பதற்கு 5 மடங்கு வாய்ப்புள்ளது என்கிறது மருத்துவ ஆய்வுகள். குழந்தை திருமணம் பெண்களின் கல்வி பயிலும் வாய்ப்பினை, அவர்களது சுய முன்னேற்றத்தினை கேள்விக்குறியாக்குகிறது.

6 வயது சிறுமியை மணம் முடித்த 45 வயது நபருக்கு தண்டனை வழங்காமல், மறைமுகமாக திருமணத்தினை தாலிபான்கள் அரசு ஆதரித்துள்ளது என குழந்தைகள் நல செயற்பாட்டாளர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.