டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர், டிவிட்டரை ‘X’ என்று பெயர் மாற்றி பல்வேறு முக்கிய அம்சங்களை அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறார். அதோடு, தன்னுடைய தனிப்பட்ட எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் சர்ச்சைக்குரிய சில கருத்துக்களையும் பதிவிட்டு ஹாட் டாப்பிக்காகவும் மாறி வருகிறார். உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க், முக்கிய அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரங்களுக்காகவும் எக்ஸ் வலைத்தளத்தை பயன்படுத்துகிறார். அந்தவகையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்பிற்கு ஆதரவான கருத்துகள், வீடியோக்களை எக்ஸ் வலைத்தளத்தில் அதிக அளவில் பகிரும் அளவிற்கு அரசியல் பிரசார மேடையாக எக்ஸ் வலைத்தளத்தை மாற்றியுள்ளார் எலான் மஸ்க்.
இந்த நிலையில், விரைவில் தேர்தலை சந்திக்க உள்ள பிரேசில் நாட்டில் எக்ஸ் தளத்தில் சில போலி தகவல்கள் பரவியதாகக் கூறி சில குறிப்பிட்ட கணக்குகளை முடக்கவேண்டுமென அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால், எலான் மஸ்க்கோ இந்த உத்தரவை கண்டித்ததோடும், குறிப்பிட்ட கணக்குகளை முடக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அதோடு, அக்கணக்குகளை முடக்குவது ஜனநாயக கொள்கைக்கு எதிரானது என்றும், இது கருத்து சுதந்திரத்திற்கு தடையாக மாறும் என்றும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
எலான் மஸ்க்கின் கருத்தை கேட்ட பிரேசில் உச்சநீதிமன்றம் கடுப்பானதோடு, உடனடியாக கணக்குகளை நீக்காவிட்டால் பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எலான் மஸ்கை பிரேசில் அரசாங்கமும் எச்சரித்தது. பிரேசிலின் சட்டத்தை அவர் மதிக்கவில்லை என்பதால் பிரேசிலிய உச்சநீதிமன்றம் மற்றும் எலான் மஸ்க்கிற்கு இடையே மோதல் போக்கு தொடர்ந்தது. தங்கள் நாட்டு சட்டத்தை மஸ்க் மதிக்கவில்லை என்றால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தது. ஆனால் அதற்கெல்லாம் எலான் மஸ்க் அசராததால், வேறு வழியில்லாமல் பிரேசில் நாட்டில் எக்ஸ் தளத்திற்கு தற்காலிமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலை பொறுத்தவரை, அந்நாட்டு மக்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை விட எக்ஸ் தளத்தையே அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அதோடு எக்ஸ் வலைத்தளத்தில் அரசியல் கட்சி பிரசாரங்களும் அரங்கேறின. இந்த நிலையில், எக்ஸ் மீது தடை விழுந்ததால் பிரசாரங்களில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், பிரேசில் நாட்டு மக்களில் சிலர் VPNஐ பயன்படுத்தி எக்ஸ் தளத்தை உபயோகித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்துக் கொண்ட பிரேசிலியன் பார் அசோசியேஷன், VPN-ஐ பயன்படுத்தும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
எக்ஸ் தளத்தின் மீதான பிரேசில் நாட்டின் தடை என்பது, தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள், தனிநபரின் பேச்சு சுதந்திரம் உள்ளிட்டவற்றை கேள்விக்குறியாக்கியுள்ளதால் உலகம் முழுவதும் இது பேசுபொருளாக மாறியுள்ளது. அதோடு, எக்ஸ் தளத்திற்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்து வருவதோடு, அதன்மீதான தடையை உடனடியாக நீக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.