வாஷிங்டன்: அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல்(US Presidential Election 2024) நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் களமிறங்கியுள்ளார். அவரை எதிர்த்து ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக இருக்கும் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ்(Kamala Harris) போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸும், டொனால்ட் டிரம்ப்பும்(Donald Trump) தொடர் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரசாரத்தின்போது இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கடந்த 10ம் தேதி இருவரும் முதல் நேரடி விவாதத்தில் பங்கேற்றனர். இதில் டிரம்ப் ஆட்சி காலத்தில் செய்த தவறுகளை கமலா ஹாரிஸ் பட்டியலிட்டு பேசினார். மேலும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்யும் வாக்குறுதிகளையும் பட்டியலிட்டு இருந்தார். அதே வேளையில் டொனால்ட் டிரம்ப் கமலா ஹாரிசையும், அதிபர் ஜோ பைடனையும் கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.
மேலும் கமலா ஹாரிசும் , அவரது தந்தையும் மார்க்சிஸ்ட் என்றும் டிரம்ப் மிகக்கடுமையாக கூறியிருந்தார். இதன்பிறகு இரண்டாவது விவாதத்துக்கு டிரம்ப் அழைப்பு விடுக்க, அதை கமலா ஹாரிஸ் மறுத்திருந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் அமெரிக்கா தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், தற்போதைய நிலவரப்படி யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது? என்பது குறித்து கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.
சிஎன்என்/ எஸ்எஸ்ஆர் எஸ் (CNN/SSRS),ராய்ட்டர்ஸ்/ஐப்சோஸ் (reuters/Ipsos) ஆகிய செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ் தான் முன்னிலை வகித்து வருகிறார். அதாவது ராய்ட்டர்ஸ் கருத்து கணிப்பில் கமலா ஹாரிசுக்கு வெற்றி வாய்ப்பு 47% உள்ளதாகவும், டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி வாய்ப்பு 40% உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்என்/ எஸ்எஸ்ஆர் எஸ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ்-டிரம்ப் இடையே கடும் போட்டி இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
அதாவது இந்த கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிசுக்கு 48% வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும், டிரம்ப்புக்கு 47% வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ராய்ட்டர்ஸ்/ஐப்சோஸ் கருத்துகணிப்பு வாக்களிக்க தகுதியானவர்களிடம் சுமார் 3 நாட்கள் நடந்துள்ளது. இதில் 7 மாநிலங்களில் மாகாணங்களில் இருவருக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அதிலும் அரிசோனா, ஜார்ஜியா மற்றும் வட கரோலினா ஆகிய மாகாணங்களில் டிரம்ப் ஒருபடி மேலே இருப்பதாக நியூயார்க் டைம்ஸ்/சியானா கல்லூரி (New York Times/Siena College) நடத்திய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
இந்த கருத்துக் கணிப்புகளின்போது யார் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்கவில் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் என்ற கேள்விகள் பிரதானமாக முன்வைக்கப்பட்டுள்ளன. அப்போது 43% பேர் டிரம்ப் பக்கமும், 41% பேர் கமலா ஹாரிஸ் பக்கமும் தலையசைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.