தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். துறை ரீதியாக பல்வேறு அறிவிப்பினை வெளியிட்டு வரும் நிலையில், குடிநீர் வழங்கலை மேம்படுத்த முதன்மை சுற்றுக் குழாய் திட்டம் 3 ஆண்டு காலத்திற்குள் சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு-
முதன்மைச் சுற்றுக் குழாய் திட்டம்:
”தற்போது, பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஐந்து நீர்சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் மூன்று கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த ஒவ்வொரு குடிநீர் நிலையத்தில் இருந்தும் குடிநீர் விநியோகம் நகரின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு பிரதானக் குழாய்கள் மூலம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், தேவைப்படும்போது ஒரு பகுதியின் உபரி நீரை, பற்றாக்குறை உள்ள மற்றொரு பகுதிக்கு மாற்ற இயலவில்லை.
எனவே, முதன்மைச் சுற்றுக் குழாய் திட்டம் எனும் புதிய திட்டத்தின் மூலம் அனைத்து நீர்ப்பகிர்மான நிலையங்களையும் இணைத்து, சென்னை மாநகரில் உள்ள அனைத்து குடிநீர் விநியோக நிலையங்களுக்கும் சமமான அளவில் குடிநீர் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும். சமச்சீரான குடிநீர் விநியோகத்தை உறுதிசெய்திடும் இத்திட்டம் 2,423 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த 3 ஆண்டு காலத்திற்குள் நிறைவேற்றப்படும்.”
சென்னைப் பெருநகர மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் அளவிலும், கோவை மாநகராட்சியில் 120 கோடி ரூபாய் அளவிலும், திருச்சி மாநகராட்சியில் 100 கோடி ரூபாய் அளவிலும் மற்றும் திருப்பூர் மாநகராட்சியில் 100 கோடி ரூபாய் அளவிலும் நகர்ப்புர நிதிப் பத்திரங்கள் வாயிலாக, கூடுதல் நிதி ஆதாரங்களைத் திரட்டுவதன் மூலம் நகர்ப்புர உட்கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்றிடத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
Read more: TN Budget 2025: ரூ.3796 கோடியை வழங்காத மத்திய அரசு- நிதியமைச்சர் தங்கம் தென்னரசு