Instagram Post Enmity at Karur : கரூர், தெற்கு காந்திகிராமம், கம்பன் தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் - சுந்தரவள்ளி தம்பதியினர். இவர்களது முதல் மகன் ஜீவா (20) திருப்பூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார். 2வது மகன் சஞ்சய் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
ஜீவா விடுமுறைக்காக ஊருக்கு சென்ற நிலையில், திடீரென்று அவர் மாயமாகி உள்ளார். இதனால், கடந்த 22-ஆம் தேதி மகனை காணவில்லை என தாயார் சுந்தரவள்ளி தாந்தோணிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், தொழிற்பேட்டை சிட்கோ தொழிற்சாலைக்கு பின்புறம் உள்ள, கைவிடப்பட்ட பாலடைந்த கட்டிடங்களுக்கு பின்புறம் உள்ள முட்புதரில், ஜீவாவை கொலை செய்து புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, கரூர் சரக டிஎஸ்பி செல்வராஜ் தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்திற்கு சென்று, ஜீவாவின் சடலத்தை தோண்டி எடுத்தனர்.
கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட ஜீவாவின் உடலை தோண்டி எடுக்கும் போது கை, கால்கள், உடல் என ஆறு துண்டுகளாக வெட்டி கொலை செய்து புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்தது. அதனை தொடர்ந்து அரசு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே உடற்கூறு ஆய்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜீவாவை திட்டமிட்டு கொலை செய்த வடக்கு காந்திகிராமம், EB காலனியை சேர்ந்த சசிகுமார் உள்ளிட்ட 9 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் 2 பேரை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து கொலை நடந்த இடம் குறித்து அடையாளம் காட்டியுள்ளனர்.
தடயங்களை சேகரிப்பதற்காக வந்த கைரேகை நிபுணர்கள் அருகில் இருந்த கட்டிடத்தில் ரத்தக் கரை படிந்துள்ள மாதிரிகளை எடுத்துச் சென்றனர். மேலும், சம்பவ நடந்த இடத்தில் கிடந்த மது பாட்டில்களில் கைரேகை உள்ளதா என்று சோதனை செய்தனர்.
இதற்கிடையில், ஜீவாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, மகன் கொலை செய்யப்பட்ட இடத்தை கண்டதும் தாய் சுந்தரவல்லி கதறி அழுத நிலையில், அவரை உள்ளே அனுப்பாமல் போலீசார் தடுத்து நிறுத்தி வெளியே அமர வைத்தனர்.
ஜீவா கொலை தொடர்பாக கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி பின்னணிகள் வெளிவந்துள்ளன. கடந்த, 2021ல் கிருஷ்ணமூர்த்தி என்பவர், முன்விரோதம் காரணமாக, அவரது நண்பர்களான சசிக்குமார், மோகன் ஆகியோரை மேலப்பாளையம் அமராவதி ஆற்றுக்கு அழைத்து சென்று, மதுவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். அதில் மோகன் இறந்துள்ளார்.
இதில் சிறை சென்ற கிருஷ்ணமூர்த்தி, தற்போது ஜாமினில் உள்ளார். சசிக்குமார் மருத்துவ சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். இந்த கொலைத் திட்டத்தின் பின்னணியில், ஜீவா இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஜீவாவை போட்டுத்தள்ள சசிக்குமார் தரப்பு காத்திருந்துள்ளது.
மேலும் சசிக்குமார் படத்தை, 'இன்ஸ்டாகிராமில்' போட்டு, முகத்தை சிதைத்து விடுவதாக ஜீவா பதிவிட்டு எச்சரித்துள்ளார்.
இதுவும் ஆத்திரத்தை கிளப்பியதால், விடுமுறையில் ஊருக்கு வந்த ஜீவாவை நைசாகப் பேசி அழைத்துச் சென்று வெட்டி கொலை செய்து புதைத்துள்ளதாக விசாரணையில் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தொழிற்பேட்டை சிட்கோ தொழிற்சாலைக்கு பின்புறம் உள்ள, கைவிடப்பட்ட பாழடைந்த கட்டடங்களுக்கு பின்புறம், கஞ்சா செடிகள் வளர்ப்பது போன்றும், கஞ்சா போதையில் இருக்கும் நபர்கள் உள்ளது போன்றும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது. மேலும், இந்தப் பகுதியில் கஞ்சா போதை இளைஞர்கள் ஒன்று கூடுவதாகவும் கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராம் பதிவு மற்றும் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.